மற்றொரு கோட்டையில் தங்கம்: 'புருடா' விடுகிறார் சாமியார்

லக்னோ: உ.பி.,யில், பழங்கால மன்னர் கோட்டையின் கீழ், 1,000 டன் தங்கம் இருப்பதாக, 'புருடா' விட்ட, சாமியார், சோபன் சர்க்கார், இப்போது, மற்றொரு கோட்டையில், 2,500 டன் தங்கம் இருப்பதாக கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யில், சோபன் சர்க்கார் என்ற சாமியார் பிரபலமானவர். ராம்பக்ஸ் சிங் என்ற, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னர், உன்னாவோ என்ற இடத்தில் உள்ள, தன் கோட்டையின் கீழ்,
1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளார் என, சாமியார் சோபன் சர்க்கார் கூறினார். இதற்காக, 'மறைந்த அந்த மன்னர், என் கனவில் தோன்றி, தோண்டச் சொன்னார்' என, அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

தனக்கு நெருக்கமான, சில, மத்திய அமைச்சர்கள் மூலம், அந்த கோட்டையை தோண்டி, ஆய்வு செய்ய, சாமியார் அனுமதி பெற்றார். மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர், அந்த கோட்டையை, 15 நாட்கள் தோண்டிய பிறகும், தங்கம் கிடைக்காததால், தோண்டிய இடத்தை மூடிச் சென்றனர். இந்நிலையில், மீண்டும் அந்த சாமியார், பதேபூர் என்ற இடத்தில் உள்ள, மற்றொரு கோட்டையில், 2,500 டன் தங்கம் இருப்பதாகக் கூறி, அந்த இடத்தை தோண்ட, அனுமதி அளிக்குமாறு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தொடர்ந்துள்ள வழக்கு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

Comments