புதுடில்லி: மக்கள் ஆதரவளித்தால் டில்லியில் ஆட்சியமைக்க தயார் என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லி மாநிலத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., 32 தொகுதிகளிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சியான காங்கிரஸ், எட்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.ஆட்சி அமைக்க, 36 எம்.எல்.ஏ.,க்கள் வேண்டும் என்பதால், எந்த கட்சியும், ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை.
இதனையடுத்து டில்லி மக்களிடம் கருத்துக்கேட்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்தது. இது தொடர்பாக அக்கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறுகையில்,: 'இந்த இரண்டு கட்சிகளில், ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து, டில்லியில், சிறுபான்மை அரசு அமைக்கலாமா' என, டில்லி மாநில மக்களிடம், கருத்து கேட்க முடிவு செய்துள்ளோம்.கருத்து தெரிவிக்கும்படி, 25 லட்சம் கடிதங்களை, டில்லி மக்களிடம் வினியோகிக்கவுள்ளோம். எஸ்.எம்.எஸ்., மூலமாக, ஆம் என்றோ, இல்லை என்றோ, மக்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் டில்லியில் அரசமைப்பது தொடர்பாக தனியார் டிவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
பெரும்பான்மையான மக்கள் பா.ஜ., மற்றும் காங்கிரசின் ஆதரவை ஏற்க வேண்டாம்
என கருதுகின்றனர். மக்களிடம் கருத்துக்கேட்பது என்பது சரியான நடைமுறையாக
இருக்காது. இருப்பினும் முக்கிய முடிவை டில்லி மக்கள் எடுக்க வேண்டும்.
பெரும்பான்மையான மக்கள் ஆதரவளித்தால் டில்லியில் ஆட்சியமைக்க தயாராக
உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 4 மாதத்தில் மின்கட்டணத்தை குறைப்போம்.
மின்கட்டணத்தை குறைக்கும் வரை மக்கள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம்.
டில்லியில் மின்வினியோகம் செய்யும் பணியிலிருந்து ரிலையன்ஸ் மற்றும் டாடா
நிறுவனங்கள் வெளியேறட்டும். டில்லி அரசே மின் வினியோகத்தை செய்யட்டும்.
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் மசோதா வலிமையற்றது. மசோதா நிறைவேற்றிய பின்னரும், சி.பி.ஐ., சுதந்திரமாக செயல்பட முடியாது. லோக்பால் மசோதா நிறைவேற்றியதற்கான பெருமை அன்னா ஹசாரேவையே சேரும். அன்னா ஹசாரேவுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. லோக்பால் விவகாரத்தில் சிலர் அவரை தவறாக வழிநடத்தியுள்ளனர்.
இந்திய அரசியலில் ஆம் ஆத்மி கட்சி புரட்சி செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு அரசியல் பாடம் நடத்துகிறது. 2014ல் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது. இதற்கு சில நல்லவர்கள் எங்களுக்கு தேவை. மோடி,ராகுல் மற்றும் மாயாவதி ஆகியோர் எங்கள் அரசியல் இலக்கில் இல்லை. எனது வங்கிக்கணக்கில் ஒரு லட்ச ரூபாய் கூட இல்லை என கூறினார்
பிளவை ஏற்படுத்த முயற்சி: மற்றொரு பேட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: அன்னாவுக்கும் தமக்கும் இடையே பிளவை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர். அன்னா தமது இதயத்தில் உள்ளார் என கூறினார். ஆனால் பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் எவை என்பதை கூற கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.
Comments