"பெல்' நிறுவனம் முரண்டு பிடிப்பதால் வட சென்னை விரிவாக்கத்தில் மின் உற்பத்தி தாமதம்

சென்னை: 'பெல்' நிறுவனம் முரண்டு பிடிப்பதால், வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க, இரண்டாவது அலகில், மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில், 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, மூன்று அலகுகள் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல்மின் நிலைய வளாகத்தில், தலா, 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு அலகுகள் அமைக்கும் பணி, 2008ல் துவங்கப்பட்டது.
இதன் கட்டுமான பணிகளை, பொதுத் துறையை சேர்ந்த, "பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (பெல்)' மேற்கொண்டது. வட சென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தில், 2011ல் மின் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டது. ஆனால், "பெல்' நிறுவனம், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காததால், நீண்ட இழுபறிக்கு பின், கடந்த செப்டம்பரில், மின் உற்பத்தி துவங்கியது. இதன் மூலம், 1,200 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைத்ததால், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை ஓரளவிற்கு சமாளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம், 16ம் தேதி, இரண்டாவது அலகில், மின் உற்பத்தி நடந்து கொண்டிருந்த போது, பாய்லர் அருகில், எண்ணெய் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த ஒயர், வால்வு உள்ளிட்ட கருவிகள் எரிந்து போயின. இதனால், இரண்டாவது அலகில், மின் உற்பத்தி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதால், 600 மெகாவாட் மின்சாரம் பாதிக்கப்பட்டது. நீர் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு, மத்திய ஒதுக்கீடு குறைப்பு, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு போன்ற காரணங்களால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படுகிறது. இதையடுத்து, தீ விபத்தால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட, வட சென்னை விரிவாக்க இரண்டாவது அலகில், "வரும், 20ம் தேதிக்குள் மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக எரிசக்தி துறை அதிகாரிகள், "பெல்' நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, "தீயில் எரிந்து போன கருவிகளுக்கு பதில், புதிய கருவிகள் பொருத்த வேண்டும். அதற்கான கருவிகளை கொள்முதல் செய்ய காலம் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, ஜனவரிக்கு பின்னர் தான் மின் உற்பத்தி துவங்கப்படும்' என, "பெல்' நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தின் மின் பற்றாக்குறை குறித்து, 'பெல்' நிறுவனத்திற்கு நன்கு தெரியும். இருப்பினும், அவர்கள் தாமதம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. இந்த அலகில் மின் உற்பத்தி துவக்கினால், 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்' என்றனர்.

Comments