கோவை
மாநகர தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன். இவருக்கு,
சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் இடம் உள்ளது. இதில், புதுக்கோட்டையைச்
சேர்ந்த செல்வம் என்பவர், மதுபான "பார்' நடத்தி வருகிறார். இதற்கான உரிமம்,
சிங்காநல்லூரைச் சேர்ந்த குமார் என்பவர் பெயரில் உள்ளது. இந்நிலையில்,
இடத்தை காலி செய்ய ரவிச்சந்திரன் கூற, செல்வம் மறுத்துவிட்டார்.
இதுதொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருவருக்கும் இடையே பகை
நீடித்து வந்த நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில், சொகுசு காரில்,
ஆயுதங்களுடன் வந்த கும்பல், மதுபான "பாரில்' இருந்த செல்வம் மற்றும்
ஊழியர்களை தாக்கியது. செல்வம் தரப்பினரும் பதிலுக்கு தாக்கியுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த மோதலை நேரில் பார்த்து, அப்பகுதி மக்கள்
அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூர் போலீசார், பலத்த
காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோதல் தொடர்பாக,
ரவிச்சந்திரன் தரப்பைச் சேர்ந்த பாலாஜி, 27, பிரசாத்குமார், 23, பிரவீன்,
23, பசுவராஜ், 41, சசிகுமார், 31 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக
உள்ள மூவரை தேடுகின்றனர். பார் உரிமையாளர் செல்வம் மற்றும் கடை ஊழியர்கள்
பலத்த காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து
சிங்காநல்லூர் போலீசார் கூறியதாவது: ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக,
சிங்காநல்லூரைச் சேர்ந்த தனியார் டாக்டர் செயல்பட்டுள்ளார். டாஸ்மாக் பார்
இடத்தை, மிரட்டி காலி செய்வதற்காக, அடியாட்களை காரில் அனுப்பி
வைத்துள்ளார். தாக்குதலின் போது காயமடைந்தவர்களை மீட்க, தனது மருத்துவமனை
ஆம்புலன்சையும் அனுப்பியுள்ளார். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. போலீஸ்
அதிகாரி ஒருவர், டாக்டருக்கு ஆதரவாக செயல்பட்டு, அவரை, வழக்கில்
சேர்க்கவேண்டாம் என, நிர்பந்தம் செய்துவருகிறார். வன்முறையில்
ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும், கைது செய்யப்படுவர். நடந்த சம்பவம்
குறித்து, விடுமுறையில் இருக்கும் போலீஸ் கமிஷனருக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
Comments