'அவமானப்படுத்திட்டாங்கய்யா!': முலாயம் கருத்துக்கு கடும் கண்டனம்

லக்னோ: முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாம்களில் உள்ளவர்கள், காங்., - பா.ஜ.,வுக்கு ஆதரவானவர்கள் என்று முலாயம் சிங் கூறியிருந்ததற்கு, கடும் கண்டனம் எழுந்துள்ளது. பா.ஜ., தலைவர்கள் மட்டுமல்லாது, முஸ்லிம் மத அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல், சமீபத்தில் முசாபர் நகர் சென்று, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள, நிவாரண முகாம்களை பார்வையிட்டார். இதற்கு, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், கண்டனம் தெரிவித்து இருந்தார். அப்போது அவர் கூறுகையில், 'முகாம்களில் தங்கியிருக்கும் யாருமே, முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது; அனைவரும் சதிகாரர்கள். காங்கிரசும், பா.ஜ.,வும், மக்களை முகாம்களில் தங்கவைத்து, போராட்டத்தில் ஈடுபட வைக்க சதி செய்கின்றன. இந்த இரண்டு கட்சிகளுமே, சமாஜ்வாதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன' என்று குறிப்பிட்டு இருந்தார். முலாயம் சிங்கின் கருத்திற்கு கடும் சர்ச்சையும், கண்டனமும் கிளம்பியுள்ளது. அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியத்தின் பொது செயலர் மவுலானா நிஜாமுதீன் கூறுகையில், ''இந்த பிரச்னையை, முலாயம் சிங் யாதவ், உள் நோக்கத்துடன், அரசியல் சாயம் பூச பார்க்கிறார். இது பொறுப்பற்ற செயல்,'' என்றார்.

பா.ஜ., துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: சமாஜ்வாதி தலைவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி, மதச்சார்பின்மை என்ற பெயரில் அரசியலில் விளையாடுகிறது. கலவரத்தால் காயம் பட்டவர்களுக்கு, ஆறுதலாக இருப்பதைவிட்டு, மேலும் ரணமாக்குகிறது. காங்கிரஸ் தலைவர்கள், தொடர்ந்து முசாபர் நகர் சென்று, முகாம்களில் உள்ளவர்களை பார்வையிடுவது தவறு. அதிலும் குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே சந்தித்து, அனுதாபம் தேடுவது, ஓட்டு வங்கி அரசியல் மையமாக வைத்து தான். இவ்வாறு, அவர் கூறினார்.

பகுஜன் சமாஜ் தலைவர், சுதிந்தர பாதோரியா கூறுகையில்,''முலாயமின் கருத்து மிகவும் அவமானமாக உள்ளது,'' என்றார். அகில இந்திய ஷியா தனி சட்ட வாரிய செய்தி தொடர்பாளர் யாசூப் அப்பாஸ் கூறுகையில், ''உண்மையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லையென்றால், இது குறித்து விசாரணைக்கு சமாஜ்வாதி கட்சி உத்தரவிட்டு இருக்க வேண்டும். அதை விடுத்து, கருத்து தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்ற செயல். முகாமில் உள்ளவர்களுக்கு போதிய வசதிகளை செய்து தருவதை விட்டுவிட்டு, அரசியல் சாயம் பூசுவது பொறுப்பற்ற செயல்,'' என்றார்.

Comments