தமிழ் தலைவர்களுக்கு ராஜபக்ஷே அழைப்பு

கொழும்பு: தேசிய நல்லிணக்க முயற்சியில் பங்கேற்கும் படி, தமிழ் மாகாண தலைவர்களுக்கு, இலங்கை அதிபர், ராஜபக்ஷே அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான சண்டை ஓய்ந்தது. இருப்பினும், தமிழர்களுக்கு எதிராக, மனித உரிமை மீறல் தொடர்வதாக, ஐ.நா., மனித உரிமை ஆணையம் புகார் தெரிவித்திருந்தது.
இந்த விஷயத்தில், உரிய நடவடிக்கை எடுக்கும் படி, ஜெனிவா கூட்டத்தில், இரண்டு முறை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில், கடந்த மாதம் நடந்த, காமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்க வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ""மனித உரிமை மீறல் குறித்து, தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்; இவ்விஷயத்தில், இலங்கை உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், அடுத்த ஆண்டு, மார்ச் மாதம், நடைபெற உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில், மூன்றாவது முறையாக, இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரப்படும்,'' என, எச்சரித்தார். இந்த எச்சரிக்கைக்கு பிறகு, இலங்கை அதிபர், சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போரின் போது காணாமல் போனவர்களை, கணக்கெடுக்கும் பணி தற்போது நடக்கிறது.

அந்நாட்டு பார்லிமென்ட்டில், பட்ஜெட் கூட்டத் தொடரில், அதிபர் ராஜபக்ஷே பேசியதாவது: நம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் ஏற்படுவதற்காக, அரசு எடுக்கும் முயற்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர், விக்னேஷ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க வேண்டும். நம்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என, உறுதி பூண்டுள்ளோம். இந்த தருணத்தில், தீய நோக்கோடு, குறை கூறி கொண்டிருக்காமல், அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். வெளிநாட்டு உதவியுடன் தீர்வு காண்பதை விட, நம்முடைய பிரச்னைக்கு, நாமே தீர்வு காண வேண்டும். இந்த நடைமுறை, மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும். எதிர்கால தலைமுறையினருக்கு, இது உதவியாக இருக்கும். தமிழர் பகுதிகளில், பொதுச் சேவையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில், உறுதியாக இருக்கிறோம். வடக்கு மாகாண கவுன்சில் உருவாக்கப்பட்டதை, ஜனநாயகத்தின், ஒரு மைல் கல்லாக தான் கருத வேண்டும். இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.

Comments