தேவ்யானியை மீட்காமல் வரமாட்டேன்: சல்மான் குர்ஷித் சபதம்

புதுடில்லி : இந்திய துணைத் தூதர் தேவ்யானியை மீட்காமல் பார்லி.,க்கு வரமாட்டேன் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் விசா முறைகேடு தொடர்பாக இந்திய துணைத் தூதர் தேவ்யானி கோபர்கேட் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து இன்று பார்லி.,யின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் போது பேசிய உறுப்பினர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகையில், அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ள தேவ்யானியை மீட்டு நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவேன்; தேவ்யானியை மீட்காமல் நான் பார்லி.,க்கு திரும்பி வர மாட்டேன். இவ்வாறு குர்ஷித் தெரிவித்துள்ளார்.


தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்த குர்ஷித், தேவ்யானி கைது செய்யப்பட்டதில் அமெரிக்காவின் சதி அடங்கி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சதி செய்து அவர் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பெண் தூதரக அதிகாரி அப்பாவி; அமெரிக்காவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது; அவர் சட்டவிரோதமாக நடவடில்லை; இருப்பினும் போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்ததாக அவர் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது; தூதரின் கவுரவத்திற்கு பங்கம் வராமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும்; அவரை இந்தியா அழைத்து வர வேண்டியது எனது பொறுப்பு; முதலில் அவரை அமெரிக்கா கைது நடவடிக்கையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டு, பின்னர் அமெரிக்கா மீத இந்தியா எடுக்க வேண்டியது நடவடிக்கை குறித்த பேசப்படும். இவ்வாறு குர்ஷித் விளக்கம் அளித்துள்ளார்.

Comments