கட்சிகளின் வருகைக்காக காத்திருக்க முடிவு

கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, காங்கிரசுடன் இருந்த, ஒன்பது ஆண்டு கால உறவை முறித்துக் கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி, வரும் லோக்சபா தேர்தலில், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளின் துணையுடன், தேர்தலை சந்திக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளபோதிலும், தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வலை விரிக்கவும், அக்கட்சிகளின் வருகைக்காக காத்திருக்கவும் முடிவு செய்துள்ளதாக, அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., கடந்த, இரண்டு லோக்சபா தேர்தல்களில், காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அதன்மூலம், மத்திய ஆட்சியில் பங்கு பெற்று, செல்வாக்குடன் திகழ்ந்தது.


'ஸ்பெக்ட்ரம்' ஊழல் :
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, '2ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான சி.பி.ஐ., விசாரணையில், தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் சிக்கியதை அடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த உறவு, பாதிக்கத் துவங்கியது.அதைத்தொடர்ந்து வந்த, இலங்கை தமிழர் விவகாரம், காங்கிரஸ் - தி.மு.க., விரிசலை அதிகமாக்கியது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம், இலங்கை தமிழர் பிரச்னையை காரணம் காட்டி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வெளியேறியது.ஐ.மு., கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது.
ஆதரவு தொடர்ந்தது:
ஆனால், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை தொடர்ந்தது. அதனால், இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த உறவுப் பாலம் அடியோடு அறுந்து விடாமல், தொடர்ந்தது.இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமையின் சமீபத்திய போக்கு; ஏற்காடு இடைத் தேர்தலில் ஆதரவு அளிக்க மறுப்பு; ஐந்து மாநில தேர்தல்களில், காங்கிரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஆகியவை, தி.மு.க.,வை யோசிக்க வைத்தது.
எதிர்ப்பு:
குறிப்பாக, நான்கு மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி, அக்கட்சியுடன் கூட்டு சேர்வதற்கு, தி.மு.க.,வில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காங்கிரசை சுமையாக கருதிய தி.மு.க.,வினர், கட்சிப் பொதுக்குழுவில், காங்கிரசுக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பினர். அதன் விளைவாக, காங்கிரஸ் உறவை துண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:தமிழகத்தில், அணி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்; காங்., - பா.ஜ., அல்லாத கட்சிகளுக்கு வலை விரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முடிவை தி.மு.க., எடுத்துள்ளது.
இன்னும் வரவில்லை:
தே.மு.தி.க., - பா.ம.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., உறவு ஏற்பட்டு விட்டால், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறும்.பா.ஜ., தலைமையில் ம.தி.மு.க., மட்டுமே சேர்வது உறுதியாகி உள்ளது. விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகியோரை ஓரணியில் சேர்ப்பது மிகவும் சிரமம். எனவே, பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் என்ன முடிவு செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. அந்த கட்சிகளுக்கு துாது விடப்படலாம். வலுவான கூட்டணியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால், அக்கட்சிகள், தி.மு.க., அழைப்பை ஏற்க முன்வரலாம்.ஏற்கனவே, தி.மு.க., அணியில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம் கட்சிகள் உள்ளன.
தலைமையின் திட்டம்:
இக்கட்சிகளுடன், கம்யூனிஸ்ட்டுகளோ, தே.மு.தி.க.,வோ இணைந்தால், வலுவான கூட்டணியாக மாறும். எனவே, அதுவரை காத்திருக்கலாம் என்பது தான் தலைமையின் திட்டம்.யாரும் வராமல் போனால், இப்போதுள்ள கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு தனித்துப் போட்டியிடவும் தி.மு.க., தயாராக இருக்கிறது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், சென்னையில் நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள்சந்தித்தனர். காங்கிரஸ் - பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் புது கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.

மகிழ்ச்சி:
பின்னர், கருணாநிதி அளித்த பேட்டி வருமாறு:
தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகும் என, காதர் மொய்தீன் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.லோக்சபா தேர்தலுக்காக, தி.மு.க.,விற்கு ஆதரவு கேட்டு எந்தவிதமான கடிதமும் தி.மு.க.,வுக்கு எழுதவில்லை என, ஞானதேசிகன் கூறியுள்ளார். அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். காங்கிரசை விட்டு விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் - பா.ஜ.,வுடன் சேராமல், தி.மு.க., தனித்து போட்டியிடும். ஏற்கனவே உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடும். 'கூட்டணிக்காக தி.மு.க., அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம்' என, பா.ஜ., நிர்வாகி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆனால், பா.ஜ.,வை நாங்கள் அழைப்பது என, எந்த முடிவும் செய்யவில்லை.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

Comments