தவறான தகவல் கொடுத்தாலும் தண்டிக்கும் அதிகாரம் இல்லாத தேர்தல் கமிஷன்

புதுடில்லி : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை; அந்த தகவல்கள் தவறானது என்று கருதும் பொதுமக்கள் இது குறித்து கோர்ட்டுக்குச் செல்லலாம் என்கிறார் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத். இமெயில் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சம்பத் வெளிப்படையாக பல பதில்களை அளித்துள்ளார். சம்பத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு :


* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் தங்களின் அசையா சொத்துக்களின் மதிப்பை குறைத்துக் காட்டுவதாக ஆய்வில் கூறப்படுகிறது. வேட்பாளர்களிடம் சொத்துக்களின் மதிப்பீடு குறித்த அறிக்கை அளிக்குமாறு கேட்க முடியாதா?

வேட்பாளர்கள் தங்களின் அசையா சொத்துக்கள் குறித்த உண்மையான விபரங்கள், முதலீடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பிரமான பத்திரம் ஏற்றுக் கொள்வதற்கு முன் சொத்துக்கள் குறித்த மதிப்பீட்டை அளிக்க வேண்டும் என சட்டத்தில் எந்த விதிமுறையும் இல்லை.

* பெரும்பாலானோர் தங்களின் சொத்து வரி அடிப்படையிலே சொத்து மதிப்பை குறிப்பிடுகினறனர். இது தற்போதைய சந்தை மதிப்பை காட்டாது. இதற்கு தேர்தல் கமிஷனின் செயல்பாடு என்ன?

சொத்துக்கள், கூடுதல் முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் இருக்கும் இடம் ஆகியன பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது தேர்தல் நடைமுறை சட்டத்தின் கீழ் வேட்பாளர்களிடம் சொத்துக்களின் மதிப்பை கேட்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை. சில வேட்பாளர்கள் தங்களின் சொத்து வரி கணக்கு அடிப்படையில் சொத்து மதிப்பை குறிப்பிடுகின்றனர்.சொத்து சட்டத்தின் அடிப்படையில் அவற்றின் மதிப்பு சரிபார்க்கப்படுகிறது.

* பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களின் நகைகள் குறித்த மதிப்பையும் குறைத்தே காட்டுவதாக கூறப்படுகிறது. இதனை தேர்தல் கமிஷன் எவ்வாறு அணுகுகிறது?

விண்ணப்பம் 26ல் நகைகளின் எடை மற்றும் அவைகளின் மதிப்பு குறிப்பிடப்படுகிறது.அந்த எடைகளின் அடிப்படையில் அவற்றின் சந்தை விலையை வைத்து அவற்றின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

* வேட்பாளர்கள் அவர்களின் வாரிசுகளின் சொத்து மதிப்பை குறிப்பிடுவதில்லை. இது வேட்பாளரின் சொத்து மதிப்புடன் தொடர்புடையதா, இல்லையா?

சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி வேட்பாளர்கள், அவர்களின் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகளின் சொத்து விபரம் மற்றும் அவர் வகிக்கும் பதவிகள் குறித்த விபரங்களை அளிக்க வேண்டும். அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் வேட்பாளரை சார்ந்து இருந்தால் அவர்கள் நிச்சயம் சொத்து மதிப்பை அளிக்க வேண்டும். சார்ந்து இல்லாமல் தனித்து இருந்தால் டாரிசுகளின் சொத்துக்களின் மதிப்பை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

* மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்தை முறையாக ஆராய்வதில்லை. இவ்வாறு அவர்கள் நடப்பு சரியில்லை தானே?

மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அல்லது தேர்தல் சரிபார்ப்பு அதிகாரிகள் வேட்பாளரின் பிரமாண பத்திரம் அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விபரங்களை சரி பார்க்க அனுமதி கிடையாது. வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பதவிகள் குறித்த விபரங்களை மக்கள் அறிவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் இணையதளத்தில் வெளியிடுவார். அது தவறான மதிப்புக்கள் என யாராவது கூறினால் அவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125ன் கீழ் கோர்ட்டில் புகார் அளிக்கலாம்.அவ்வாறு புகார் அளிக்கப்பட்டால், வேட்பாளரின் சொத்து மதிப்பை இணையதளம் மூலம் டவுன்லோட் செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நேரடி வரித்துறை மற்றும் நிதித்துறை புலனாய்வு அமைப்பு ஆகியவற்றை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொள்ளும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தபட்ட வேட்பாளரை தேர்தல் விதிமுறைகளின்படி தகுதிநீக்கம் செய்யவோ அல்லது 2 ஆண்டு வரை சிறையில் அடைக்கவோ தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்யும்.

* இது போன்று இதுவரை யாராவது தவறான சொத்து மதிப்பு அளித்ததாக நிரூபிக்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா?

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் இதுவரை அப்படி யார் மீதும் தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.

* பிரமாண பத்திரத்துடன் வருமான வரி சான்றும் இணைக்கும்படி கேட்காததற்கு என்ன காரணம்?

விண்ணப்பம் 26ல் வேட்பாளர், அவரின் கணவர் அல்லது மனைவி மற்றும் அவர்களுடன் வசிக்கும் குழந்தைகளின் நிரந்தர கணக்கு எண்(பான்) மற்றும் வருமான விபரங்கள் கேட்கப்படுகிறது. அதனால் அதற்கான சான்றை பெற வேண்டும் என சட்ட விதிமுறை இல்லை. அது மட்டுமின்றி வருமான வரி சட்டத்தின்படி ஒருவரின் வருமானம் குறித்த சான்றை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது.

Comments