தி.மு.க., யாருடன் கூட்டணி: கனிமொழி சூசகம்

திருநெல்வேலி : ""தி.மு.க., வின் வாழ்விலும், தாழ்விலும் உடன் இருக்கும் கட்சிகளுடன், கூட்டணி அமைப்போம்,'' என, கனிமொழி பேசினார்.

தி.மு.க., எம்.பி., கனிமொழி, நேற்று நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். களக்காடு பேரூராட்சியில், எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, 25 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட, வாகன காப்பகத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நகர் செயலாளர் அப்துல் வகாப் என, அனைத்து கோஷ்டியினரும் பங்கேற்றனர்.


கனிமொழி பேசியதாவது:தி.மு.க., வினர் ஒற்றுமையாக செயல்பட்டால் நமது வெற்றி உறுதி . அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும், தமிழகத்தில் இருந்த கொள்ளைக்காரர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக ஜெ., சொன்னார்; வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள், மீண்டும் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு இங்கே வந்து விட்டனர். அந்த அளவுக்கு கொலை, கொள்ளைகள் பெருகிவிட்டன. தற்போதைய ஆட்சியில் இலவச "மிக்சி' வழங்கினாலும், மின்சாரம் இல்லை. ஜெ., பிரதமர் கனவில் இருக்கிறார். பிரதமரானால், வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க சென்றுவிடுவார். லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வெற்றி பெற வேண்டும். வாழ்விலும், தாழ்விலும் உடன் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.இவ்வாறு பேசினார்.

Comments