பெருநகரங்களில் ஓட்டுப்பதிவு விகிதம் : 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் தேர்தலில் மும்பையில் 45 சதவீதம் ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதே போன்று கோலாபா, போர்ட், சர்ச்கேட் உள்ளிட்ட பகுதிகளில் 34 சதவீதத்திற்கும் குறைவாகவே ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. ஆனால் 2007ல் நடைபெற்ற தேர்தலில் 38 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. கோல்கட்டாவில் 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளிலும் 66 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. ஆனால் கோல்கட்டாவில் ஓட்டளிக்க முடியாதவர்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே. சராசரியாக ஓட்டளிக்கும் தகுதி கொண்ட 85 சதவீதம் பேர் வசிக்கும் கோல்கட்டாவில் 66 சதவீதம் ஓட்டுக்கள் மட்டுமே பதிவானது. சென்னையிலும் இதே நிலை தான். 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் குறைவான அளவே ஓட்டுக்கள் பதிவானது. இது நகரின் மற்ற பகுதிகளை விட மிகவும் குறைவு. மயிலாப்பூர் தொகுதியில் உள்ள 2 ஓட்டுச்சாவடிகளிலும் சேர்த்து 421 ஓட்டுக்களே பதிவானது. ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் 292 ஓட்டுக்கள் மட்டுமே பதிவானது.
குஜராத்தின் பெரு நகரங்களான ஆமதாபாத், ராஜ்கோட், வதோதரா மற்றும் சூரத்திலும் இதே நிலை தான். மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் தால்தேஜ் பகுதியில் 47 சதவீதம் ஓட்டுக்களே பதிவானது. ராஜச்கோட்டில் 30 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுக்களே பதிவானது. இந்தியாவின் மற்ற பெரு நகரங்களிலும் இதே நிலை தான் உள்ளது. அதேசமயம் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஓட்டுப்பதிவு எண்ணிக்கை அதிகம் உள்ளது.
அரசியலாளர்கள் கருத்து : அரசியல் ஆய்வாளர் அச்யுத் யாக்னிக் கூறுகையில், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து கவனிப்பதும், அதிகம் பேசுபவதும் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் தான்; ஆனால் இவர்கள் வீட்டில் இருந்து பேசுவதோடு சரி; ஓட்டுப் போட போவதில்லை என தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில், மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசியல் சார்ந்த அறிவு அதிகம் இருக்கும்; ஆனால் அவர்கள் துணிந்து ஓட்டளிக்க வருவதில்லை; இது குறித்த ஆய்வை தேர்தல் கமிஷன் நடத்தவில்லை; அதனால் அது குறித்து தெளிவாக பேச முடியாது என தெரிவித்தார். உண்மையில் இவர்களின் கருத்துக்கள் உணர்த்துவது, அரசியல் அறிவு அதிகம் இருந்தாலும் ஓட்டளிக்க வருபவர்கள் மிகவும் குறைவானவர்களே என்பதை தான். அரசியல்வாதிகளின் கவனம் ஏழை மக்களின் ஓட்டுக்களை பெறுவதில் தான் உள்ளது. ஏனெனில் பணம் படைத்தவர்கள் மிகவும் குறைவு என்பதால் அவர்களை பற்றி அரசியல்வாதிகள் சிந்திப்பதில்லை. அதனால் ஓட்டுப் போடுவதற்கு உயர்மட்ட மக்களும் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.
அரசியல் ஆய்வுகள் : அரசியல் ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், அரசு வேலை உள்ளிட்ட பெறும்பாலானவற்றிற்கு உள்ளூர் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,யின் சிபாரிசிற்கு செல்பவர்கள் நடுத்தர மக்களே. இது போன்ற உதவிகளை அல்லது ஆதாயங்களை பெற அரசியல் தொடர், அரசியல் செல்வாக்கு தேவைப்படுவதால் ஏழை மக்களும், நடுத்தர வர்த்தகத்தினருமே அரசில்வாதிகளை அதிகம் நாடிச் செல்கின்றனர். அதனால் தேர்தல் தொடர்பான விவகாரங்களில் அவர்களின் ஆர்வம் அதிகம் உள்ளது.
மக்களின் அலட்சியம் : உயர்மட்ட மக்கள் ஓட்டளிக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை என்பது சிலரின் பேச்சுக்கள் வெளிப்படுத்தியது. அரசியல் தொடர்பான ஆய்வின் போது சென்னையைச் சேர்ந்த ஆர்.மைத்ரேயன் என்பவரிடம் கேட்ட போது, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் விடுமுறைக்காக குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்று விட்டோம்; அதுனால் எங்கள் வீட்டில் 4 பேர் ஓட்டளிக்கவில்லை; 2009ம் ஆண்டு ஓட்டுப்பதிவு நாளின் போது வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் நானும் எனது சகோதரரும் ஓட்டளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் மேல்தட்டு மக்கள் அரசியல் அறிவு இருந்தாலும், ஓட்டளிக்க தயாராக இல்லை என்பதும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்களின் சுய ஆதாயத்திற்காக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஓட்டளிப்பதும் தெளிவாகி உள்ளது.
Comments