தமிழகத்தில் மின் உற்பத்தி திடீரென சரிவடைந்தது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகபட்சம், எட்டு மணி நேரம் வரை மின்தடை இருக்கிறது. கடந்த, 1ம் தேதி முதல், சென்னையில், இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில், ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடப்பதால், அங்கு மின் தடை இல்லாமல் இருந்தது. சமீபத்தில், சென்னையில் நடந்த, மின்வாரிய தலைமை பொறியாளர்கள் கூட்டத்தில், சேலம் மாவட்டத்தை தவிர, மற்ற மாவட்டங்களில் மின்தடையை தொடருமாறு, மின்வாரிய தலைவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.கடந்த ஒரு மாதமாக, சேலம் மாவட்டத்தில் மின் தடை இல்லாமல் மக்கள் சந்தோஷமாக இருந்து வந்தனர். இன்று காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, ஏற்காடு தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதற்குப்பின், அடுத்த ஓரிரு நாளில் மற்ற மாவட்டங்களில் இருப்பது போலவே, இங்கும் மின் தடை இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் மணிவேல் கூறுகையில், ""மின் உற்பத்தி இப்போதைக்கு சீராக இருக்கிறது. குறையும் பட்சத்தில், மற்ற மாவட்டத்தைப்போல், சேலம் மாவட்டத்திலும் மின்தடை கட்டாயம் இருக்கு,'' என்றார்.
""அப்ப தேர்தலுக்காகத்தான், சேலம் மாவட்டத்தில் மின் தடை இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டதா?'' என்று கேட்டதும், ""அப்படியெல்லாம் இல்லை,'' என்று மட்டும் சொன்னார்.
Comments