கிறிஸ்துமஸ்; தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலகம் முழுவதும் நாளை ( புதன்கிழமை ) கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கென வாடிகன் உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது. பெத்லகேம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது. வாடிகனில் போப் தலைமையில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

மற்றவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் பிறருக்கு செய்ய வேண்டும் . இயேசு பிரான் அவதரித்த திருநாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தமிழக முதல்வர் ஜெ., கூறியுள்ளார். இவரது வாழ்த்து அறிக்கையில்;



மனித வாழக்கையில் நம்பிக்கை என்ற சக்தி பெற்றுவிட்டால் இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசு பிரானின் போதனையின்படி நாமும் கடைபிடித்தால் வாழ்வில் நமக்கு நிச்சயம் . இயேசு பிரானின் வழியை பின்பற்றினால் நமக்கு இறைவன் அனைத்தும் வழங்குவார்.

மற்றவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் பிறருக்கு செய்ய வேண்டும். பாகுபாடின்றி அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்.

ஏழைகள் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 891 பேர் ஜெருசேலம் அனுப்பி வைக்க தமிழக அரசு நிதி வழங்கியது என்பதை இந்நாளில் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிறிஸ்துவ பெருமக்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி: மனித நேயம் தழைக்க அன்பையும், பொறுமையையும் போதித்தவர் இயேசு. இயேசு பிரானை நினைக்கும் போது , அவரது போதனைகளை பரப்பிடும் வகையில் அயல்நாட்டு குருமார்களால் தமிழும், தமிழகமும் பெற்ற பெருமையை நாம் மறந்து விட முடியாது. இந்நன்நாளில் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இடையன்குடியில் கால்டுவெல்லுக்கு நினைவு இல்லம் அமைத்ததை நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட கிறிஸ்துவ பிரமுகர்கள் கருணாநிதியை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்: இயேசு பிரான் காட்டிய அறவழியில் அன்பு வழியில் நாம் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மனித குலத்துக்கே நீதிமொழிகளையும், உபதேசங்களையும் தந்த இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை, கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளாக, தரணியெங்கும் கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்காகவும், அதன் உயர்வுக்காகவும், ஏழை எளிய மக்களின் பிணித் துன்பத்தைப் போக்குவதற்காகவும், பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியைப் போதிப்பதற்காகவும், ஆற்றி இருக்கின்ற அருந்தொண்டு, ஈடு இணையற்றது ஆகும். திராவிட மொழிகளின் ஒப்பு இலக்கணம் தந்த கால்டுவெல்; திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்த ஜி.யு. போப்; தேம்பாவணி தந்த வீரமா முனிவர்; தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு; கடற்கரை வாழ் மக்களுக்குத் தொண்டு ஊழியம் புரிந்த புனித சேவியர் அடிகளார், திருச்சபை சேவை செய்து கொலையுண்டு மடிந்த தோமையார், ஜான் பிரிட்டோ உள்ளிட்ட இயேசு சபை அருட் தந்தையரும், போதகர்களும் ஆற்றிய அரும்பணிக்கு, தமிழ் இனம் நன்றிக்கடன்பட்டு இருக்கின்றது.

உயர்ந்த இலட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக் கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளான, அவர் நியாயத்துக்கு வெற்றி கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் என்ற சொற்களை, மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக! அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களாகிய கிறித்துவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மனமகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Comments