கோடநாடுக்கு இன்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா: பார்லிமென்ட் தேர்தல் வியூகங்கள் முடிவாகும்?

ஊட்டி: தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (24ம் தேதி) கோடநாடு வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. பார்லிமென்ட் தேர்தல் தொடர்பான முக்கிய வியூகங்கள் கோடநாட்டில் முடிவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கோடநாடில் உள்ள பங்களாவுக்கு, இன்று மதியம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகிறார். சென்னையில் இருந்து, கோவைக்கு தனி விமானம் மூலம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோடநாடுக்கு வருகிறார்.
இங்கிருந்தபடியே, அரசு பணிகளை மேற்கொள்ள உள்ள அவர், பல்வேறு திட்டங்களையும் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் முகாமுக்கும் அவர் செல்வார் என தெரிகிறது. 36 ஆண்டுகளுக்கு பின், நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட உள்ளதால், அதற்கான வேட்பாளர் தேர்வு மற்றும் தி.மு.க.,வை தோற்கடிக்கும் திட்டம், தேசிய அளவில் மூன்றாவது அணியில் இடம் பெறும் கட்சிகள், பார்லிமென்ட் தேர்தல் தொடர்பான முக்கிய வியூகங்கள் போன்றவை குறித்த முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் முதல்வர் ஜெ.,வின் இன்றைய கோடநாடு வருகை அரசியல் நோக்கர்கள் மத்தியில், அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Comments