மத்திய அரசின் கீழ் டில்லியில் இயங்கும், திட்டமிடுதல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் சார்பில் மாவட்டவாரியாக இ.டி.ஐ., (எஜூகேஷன் டெவலப்மென்ட் இண்டக்ஸ்) விபரம் சேகரிக்கப்பட்டது. கல்வியின் வளர்ச்சி பற்றிய இக்கணக்கீட்டின்படி,
மாவட்ட பள்ளிக் கல்வி தகவல்களின் அடிப்படையில், அடிப்படை மற்றும் மேல்கல்வி முறைகளில், லட்சத்தீவுகள் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் புதுச்சேரியும், அதற்கடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகாவும் வருகின்றன.தமிழ்நாட்டில், பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தினால், கல்வித்தரம் குறையாமல் <உள்ளது. இதனால் தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. முந்தைய கல்விஆண்டில் 13வது இடத்திலிருந்த பஞ்சாப், 2012-13ல், ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.2011-12 ல் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்த கேரளா, தற்போது 14வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாநிலம், தொடக்கக்கல்வி செயல்பாட்டில் பின்தங்கியதால் தான், மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2011-12 ல், தொடக்கக் கல்விக்கான பட்டியலில் ஆறாவது இடத்திலிருந்த கேரளா, இப்போது 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
டில்லி, பத்தாவது இடத்திலிருந்து ஒரு இடம் பின்தங்கி, 11வது இடத்திற்கு வந்துவிட்டது. கடந்த கல்வி ஆண்டில் எட்டாவது இடம் வகித்த மகாராஷ்டிரா, தொடந்து அந்த இடத்திலேயே நீடிக்கிறது. ம.பி., 28வது இடத்தில் உள்ளது. பீகார் 33வது இடத்திலிருந்து 30வது இடத்திற்கு, சிறிய முன்னேற்றம் கண்டுள்ளது. உ.பி., 32லிருந்து 34வது இடத்திற்கும், ராஜஸ்தான் 23லிருந்து 25வது இடத்திற்கும், மேற்குவங்கம் 29லிருந்து 31வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
Comments