அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது தி.மு.க., வேட்பாளர் புகார்: கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சேலம்: "தி.மு.க., கூட்டத்துக்கு வரும் வாக்காளர்களை தடுத்தும்,
வன்முறையில் ஈடுபட்டும், கட்சி நிர்வாகியை கொன்ற அமைச்சர்கள் மற்றும்
எம்.பி.,க்கள் உட்பட, அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'
என, தி.மு.க., வேட்பாளர் மாறன் புகார் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு
தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மாறன், சேலம் எஸ்.பி., ஆபீசில், நேற்று
கொடுத்த இரண்டு புகார் மனுக்கள் விவரம்: ஏற்காடு தொகுதி, வாழப்பாடி அடுத்த
பொன்னாரம்பட்டியில், கடந்த, 30ம் தேதி, மாலை, 5:00 மணியளவில், தி.மு.க.,
பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், தேர்தல் பிரசாரம்
செய்ய திட்டமிட்டிருந்தது.
இதற்காக, போலீசாரிடம் முன் அனுமதி பெற்று, உள்ளூர் கட்சி நிர்வாகிகள்
ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் செல்வதை அறிந்து, அப்பகுதியில், தேர்தல்
பணியாற்றிய அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம் தலைமையில், அ.தி.மு.க.,வினர்,
50க்கும் மேற்பட்டோர், பறவைகாடு கிராமத்தில் உள்ள வாக்காளர்களை மிரட்டி
அழைத்து சென்று, அங்குள்ள மாரியம்மன் கோவில் திடலில் அடைத்து வைத்துள்ளனர்.
அவர்களிடம், "இந்த இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது. நகர்ந்தால்,
தொலைத்து விடுவோம். ஸ்டாலின் ஓட்டுகேட்டு வந்து சென்ற பின் தான்,
இங்கிருந்து செல்ல வேண்டும்' என, மிரட்டியதோடு, ஸ்டாலின் வந்து சென்ற பின்,
இரவு, 7:00 மணிக்கு பிறகே, அனைவரையும் விடுவித்துள்ளனர். அப்போது,
அவர்களுக்கு, தலா, 100 ரூபாயுடன், ஒரு பிரியாணி பொட்டலமும்
வழங்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்களை சட்ட விரோதமாக அடைத்து,
தி.மு.க.,பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தடுத்து, தேர்தல் விதிக்கு மாறாக,
பணம், பிரியாணி பொட்டலம் கொடுத்த, அமைச்சர், முக்கூர் சுப்ரமணியம் மற்றும்
சம்பவத்தில் ஈடுபட்ட, அ.தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இன்னொரு புகார்:
கருமந்துறையில்,
தி.மு.க., தரப்பில் கடந்த, 2ம் தேதி, பகல், 1:00 மணியளவில் பிரசாரம்
செய்ய, போலீஸ் அனுமதியோடு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக, முன்னாள்
அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட,
ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டனர். அதே நேரத்தில், அங்கு தேர்தல்
பணியாற்றிய, அ.தி.மு.க., அமைச்சர் மோகன், எம்.பி.,க்கள் லட்சுமணன், ஆனந்தன்
மற்றும் சின்னசாமி ஆகியோர் தலைமையில், முன் அனுமதி பெறாமல், 100க்கும்
அதிகமானோர், இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அவர்களது கைகளில்,
தடி, இரும்பு கம்பிகளில், அ.தி.மு.க., கொடி ஏந்தியபடி வந்து, தி.மு.க.,
கூட்டத்தில் புகுந்து, இரட்டை இலைக்கு ஓட்டுகேட்டு, கலகத்துக்கு
வித்திட்டு, தாக்க முற்பட்டனர். அப்போது, சிதறி ஓடிய, தி.மு.க.,வினரை
விரட்டி அடித்தனர். அதோடு, அங்கிருந்த, தி.மு.க., கொடி, பதாகைகளை கிழித்து,
கொடி கம்பங்களை சாய்த்தனர். இதை தட்டிக்கேட்ட, விழுப்புரம் மாவட்டத்தை
சேர்ந்த, தி.மு.க., மாணவரணி நிர்வாகியான பாவாடை மகன் முருகனை, அடித்து,
அவர் மீது, கொடி கம்பத்தை சாய்த்தனர். இந்த இரும்பு கொடி கம்பம்,
அங்கிருந்த மின் கம்பியில் உரசி, மின்சாரம் பாய்ந்தது, இதில், முருகன்,
உடல் கருகி மயங்கினார். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக, கருமந்துறை போலீசார்,
விபத்து வழக்காக பதிவு செய்துள்ளனர். கட்சி நிர்வாகியை, அடித்து, மின்
கம்பி மீது தள்ளி கொலை செய்த அமைச்சர் மோகன், எம்.பி.,க்கள் லட்சுமணன்,
ஆனந்தன், எம்.எல்.ஏ., சின்னசாமி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த,
அ.தி.மு.க.,வினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார்
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்று கொண்ட தனிப்பிரிவு
(பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்.பி., சக்திவேலுக்கு, பரிந்துரை
செய்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Comments