நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வதோதாரா: குஜராத் நர்மதா நதிக்கரையில் அமையவிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு தளவாட பொருட்கள் சேகரிக்கும் நிலையை மக்களிடம் தெரியப்படுத்த இன்று ஒற்றுமை ஓட்டம் துவங்கியது. குஜராத் வதோதராவில் இந்த ஓட்டத்தை முதல்வரும், பிரதம வேட்பாளரும் மோடி இன்று காலையில் துவக்கி வைத்தார்.
உலகிலேயே இல்லாத அளவிற்கு 182 மீட்டர் உயரம் கொண்ட மிகப்பிரம்மாண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
மோடி செய்து வருகிறார். இந்த சிலை அமைப்பதில் நாடு முழுவதும் இருந்து பலருடைய பங்கு இருக்க வேண்டும் என்ற நோக்கில் இரும்பு மற்றும் தளவாட சாமான்கள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்துடன் ஒற்றுமை ஓட்டம் நடக்கிறது.


டில்லி, பெங்களூரூ, கோல்கட்டா, மும்பை சென்னை என பல்வேறு நகரங்களில் இந்த ஓட்டம் இன்று நடந்தது. இதில் பா.ஜ., தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

பட்டேல் நினைவு நாளை முன்னிட்டு வதோதராவில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி இந்த ஓட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத்சிங், ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னையில் பிரமாண்ட ஓட்டம்: சென்னையில் நடந்த ஓட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், தமிழிசை சவுந்திர ராஜன், வானதி சீனிவாசன் , வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments