கெஜ்ரிவால் ஆதரவாளரை விரட்டியடித்த ஹசாரே: வி.கே.சிங் பேச்சுக்கு இடையூறு செய்ததால் ஆத்திரம்

ராலேகான் சித்தி: ராணுவ முன்னாள் தளபதி, வி.கே.சிங்கின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளரை, உண்ணாவிரத பந்தலில் இருந்து, வெளியேறும்படி, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே உத்தரவிட்டார்.

குளிர்கால கூட்டத் தொடர்:

'வலுவான லோக்பால் மசோதாவை, நடப்பு, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்' என, வலியுறுத்தி, சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான, அன்னா ஹசாரே, தன் சொந்த ஊரான, மகாராஷ்டிரா மாநிலம், ராலேகான் சித்தியில், உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நான்காவது நாளாக, நேற்றும், அவரின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. ராணுவ முன்னாள் தளபதியும், சமீப காலமாக, அன்னா ஹசாரேயின், ஊழல் எதிர்ப்பு பிரசாரங்களில் பங்கேற்று வருபவருமான, வி.கே.சிங், நேற்று உண்ணாவிரதம் பந்தலுக்கு வந்து, ஹசாரேயை வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், ''இப்போதெல்லாம், சிலர், அன்னா ஹசாரேயை விட, தங்களை உயர்வானவர்களாக கருதுகின்றனர்,'' என்றார். அப்போது, அங்கு அமர்ந்திருந்த, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி கட்சி' தலைவர்களில் ஒருவரான, கோபால் ராய், இதனால், ஆத்திரம் அடைந்தார்.

ஹசாரே, கோபம்:

வி.கே.சிங்குடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிங்கின் பேச்சுக்கு, மீண்டும், மீண்டும் அவர், இடையூறு ஏற்படுத்தியதை தொடர்ந்து, மேடையில் அமர்ந்திருந்த, ஹசாரே, கோபம் அடைந்தார். ''உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கும்படி, நாங்கள், உங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதுபோல், கூச்சலிடுவதை அனுமதிக்க முடியாது. கூச்சலிட ஆசையாக இருந்தால், இங்கிருந்து வெளியே சென்று, கூச்சலிடுங்கள்,'' என, கோபால் ராயை நோக்கி, ஹசாரே, ஆத்திரத்துடன் கூறினார்.இதனால், உண்ணாவிரத மேடையில், பரபரப்பு ஏற்பட்டது.

Comments