இந்திய துணை தூதரக அதிகாரி கைது ; வேலைக்காரியை சுரண்டி பிழைத்தார்

நியூயார்க்: தனது வீட்டில் வேலைக்கார பெண்ணாக அமர்த்த விசா பெறுவதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த குற்றத்திற்காக அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் ( பெண்) தேவ்யானி கோப்ராகாடே கைது செய்யப்பட்டார். பள்ளியில் தனது குழந்தையை விட்டு வரும் போது அமெரிக்க பெடரல் போலீசார் இவரை கைது செய்து கையை பின்புறமாக கட்டி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் இந்திய அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி ( வயது 39 ). இவர் இந்திய தூதரகத்தில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பெண்கள் நலம் தொடர்பான துறையை கவனித்து வருகிறார். இவரது வீட்டீல் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியுள்ளார். இவருக்கு மிக குறைந்த சம்பளம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இந்த பணிப்பெண் அமெரிக்க போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தேவ்யானியை கைது செய்ய முடிவு செய்தனர். தேவ்யானி பள்ளியில் தனது குழந்தைகளை விட்டு விட்டு திரும்பி கொண்டிருந்தார். போலீசார் இவரை மறித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை பின்புறமாக கையை கட்டி, வீதியில் அழைத்து சென்றனர்.

மேன்ஹாட்டன் பெடரல் விசாரணை அதிகாரி பிரீத் பஹாரா கூறுகையில், விசா மோசடி மற்றும் போலி ஆவணங்கள் சமர்ப்பித்தல் தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்து. இவரை கடந்த சில மாதங்களாக நாங்கள் தேடி வந்தோம். இன்று தான் பிடிப்பட்டார். இவர், 2,50, 000 டாலர் பிணையத்தொகை செலுத்தி அவர் ஜாமினில் விடுவிக்கபப்பட்டார் என்றார்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம், இது அதிகாரி மீதான குற்றம் என்பதால் கவனத்துடன் நடவடிக்கை எடுக்குமாறும், விரைந்து முடித்து கொள்ளுமாறும் இந்திய தூதரகம் கேட்டு கொண்டுள்ளது.

10 ஆண்டு வரை சிறை : இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க சட்டத்தின்படி 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க முடியும்.

தேவ்யானியின் வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், தமது கட்சிக்காரருக்கு போலீசார் எவ்வித அவகாசமும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் தேவையான விளக்கத்தை அளித்து கைது செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் போலீசார் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

Comments