தேர்தல் தோல்விக்கும், லோக்பால் மசோதாவுக்கும் முடிச்சு போட வேண்டாம்: பொருமுகிறார் ராகுல்

புதுடில்லி: ''ஊழலுக்கு எதிரான, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், காங்., தோல்வி அடைந்ததற்கும், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கும், எந்த சம்பந்தமும் இல்லை,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் கூறினார்.

பின்னடைவு:

நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில், கடும் பின்னடைவை சந்தித்துள்ள காங்., லோக்பால் மசோதாவை நிறைவேற்றி, மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, லோக்பால் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காங்., துணை தலைவர் ராகுல், நேற்று அளித்த பேட்டி: ஊழலை ஒழிக்க வேண்டுமானால், லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்து கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே, இந்த மகத்தான மசோதாவை நிறைவேற்ற முடியும். 'ஆம் ஆத்மி' கட்சியின் வற்புறுத்தலாலும், சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததாலும் தான், இந்த மசோதாவை நிறைவேற்ற, காங்., ஆர்வம் காட்டி வருவதாக கூறுவது, தவறு; இதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்கப்பட்டது.

ஒத்துழைப்பு:

அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு, இந்த கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தாலும், அவற்றை ஓரம் கட்டிவிட்டு, லோக்பால் மசோதா நிறைவேற, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் இவ்வாறு, ராகுல் கூறினார்.

Comments