
சென்னை: சென்னையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், மலிவு விலை
காய்கறிக் கடைகளை திறக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும்,
மூன்று நாள் மாநாடு, சென்னையில், நேற்று துவங்கியது. முதல்வர் ஜெயலலிதா,
மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த, இரண்டரை ஆண்டுகளில், அனைத்து
துறைகளிலும், நிர்வாகம் எட்டியுள்ள சாதனை, திருப்தி அளிக்கிறது.
திட்டங்களை
செயல்படுத்துவதில், தமிழக அரசு, தேசிய அளவில், பல விருதுகளை பெற்றுள்ளது.
தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. சாதி, மத மோதல், இடதுசாரி
தீவிரவாதம் போன்றவை இல்லை. சமூக விரோதிகளை, இரும்புக்கரம் கொண்டு
ஒடுக்கும்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, தெளிவான
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை
தீர, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை, திரும்ப பெற வேண்டும்.
இதற்காக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சாதகமான தீர்ப்பு
கிடைக்கும் என, நம்புகிறேன். தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்புக்கு, 13 அம்ச
திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, சாதகமற்ற தட்பவெப்ப நிலையை
எதிர்கொண்டிருக்கிறோம். இதுவரை எதிர்பார்த்த அளவிற்கும் குறைவாகவே,
வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. பருவ காலம் முடிவதற்குள், மேலும் மழை
பெய்யும் என, நம்புகிறேன்.
காய்கறி கடைகள்:
விலைவாசியை
கட்டுப்படுத்த, சென்னையில், 40 மலிவு விலை காய்கறிக் கடைகள்
திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற கடைகளை, கலெக்டர்கள், மாவட்டங்களில் தேவையான
இடங்களில் துவக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், ஒன்பது
தொழிற் பூங்காக்களை, ஒன்பது தென் மாவட்டங்களில், 20,650 ஏக்கரில் துவக்க,
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த, 2011, கலெக்டர்கள்
மாநாட்டில், 81 அறிவிப்புகளை வெளியிட்டேன். அனைத்துக்கும் உரிய அரசாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநாட்டில், 346 அறிவிப்புகளை
வெளியிட்டேன். இதில், 332 அறிவிப்புகளுக்கு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எட்டு அறிவிப்புகள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா
பேசினார்.
Comments