ஏற்காடு
தொகுதிக்கான இடைத்தேர்தல், 290 ஓட்டுச்சாவடிகளில் நேற்று நடந்தது. ஒவ்வொரு
சாவடியிலும், வாக்காளர்களை கவரும் பொருட்டு, அ.தி.மு.க., தி.மு.க.,வினர்,
ஜெயலலிதா,
ஸ்டாலின் உருவப்படம் அணிந்த பனியன் அணிந்து, சைகை மூலம்
வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் இருந்தும், 200
மீட்டருக்கு அப்பால் தான், கட்சியினர் அமர வேண்டும் என்ற, தேர்தல் நடத்தை
விதி உள்ளது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஒரு சில இடங்களில்,
சாவடிக்கு அருகிலேயே கட்சியினர் அமர்ந்து, வாக்காளர்களின் கவனத்தை திசை
திருப்பும் நடவடிக்கையை மேற்கொண்டனர். கூட்டாத்துப்பட்டி அரசு மேல்நிலைப்
பள்ளியில், அந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் ஓட்டு போட்டனர். ஓட்டு
போட வந்த வாக்காளர்களுக்கு, மஞ்சள் நிறத்திலான டோக்கனை, அ.தி.மு.க.,வினர்
வழங்கி, அங்குள்ள டீக்கடையில், அவற்றை கொடுத்து, டீ, போண்டா ஆகியவற்றை
வாங்கி சாப்பிடுமாறு கூறினர். அதன்படியே, வாக்காளர்களும் செய்தனர். இதற்கான
ஏற்பாட்டை, கூட்டாத்துப்பட்டி பஞ்., தலைவர் அசோகன் செய்திருந்தார்.
தேர்தல் நடத்தை விதியை மீறும் வகையில், அ.தி.மு.க.,வினர் வாக்காளர்களை
கவனித்ததை கண்டு, தி.மு.க.,வினரும் போட்டியாக, உணவு பொட்டலங்களை வழங்கினர்.
அங்கு பணியில் இருந்த போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் இவற்றையெல்லாம்
வேடிக்கை மட்டும் பார்த்தனர்.
Comments