கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

பாராமதி: 'மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டி, லதா பகல்வான்காரே, வெறும் காலில் ஓடி, 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்றார்' என்ற செய்திக்கு பின், ஒரு சோகமும் மறைந்துள்ளது.

மருத்துவ செலவு:

இருதய கோளாறால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' கட்டணத்திற்காகத் தான், அந்த முதிய பெண், முதல் முறையாக ஓடி, வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி, நேற்று வெளியாகியுள்ளது.


இது குறித்து, லதா காரே கூறியதாவது: என் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற இடத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் தான், ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாய கூலி வேலை மூலம், தினம், 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை. அப்போது தான், மராத்தான் போட்டி பற்றி அறிந்தேன். வேகமாகக் கூட நடந்ததில்லை நான். கணவருக்காக, பந்தயத்தில் ஓடி, பரிசை வெல்ல தீர்மானித்தேன். காலில் செருப்பு கிடையாது; 9 முழ சேலையை வரிந்து கட்டி, பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன். கணவரை காப்பாற்ற, இதற்கு மேல், எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பலர் உதவி:

அவரின் மகன், சுனில் கூறும் போது, ''அம்மாவின் உடல் நிலை, ஏற்கனவே மோசம்; எப்படியோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், போட்டியில் ஓடி, அவருக்கு ஏதேனும் ஆகிவிடக் கூடாதே என, பயந்து நான், அவரை தடுத்தேன்; அவர் கேட்கவில்லை,'' என்றார். லதாவுக்கு, திருமணமான, ஒரு மகனும், மூன்று, பெண்களும் உள்ளனர். அவரின் சாதனை குறித்தும், அவரின் வறுமை குறித்தும், பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதை அடுத்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பலர் அவருக்கு பணம் கொடுத்து உதவி உள்ளனர்.

Comments