சிங்கப்பூர் கலவரம் எதிரொலி: 52 இந்தியர் நாடு திரும்பும் அவலம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக, இந்தியர்கள், 28 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ், சிங்கப்பூர் போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். 52 பேரை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப, உத்தரவிடப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில், இம்மாதம், 8ம் தேதி நடந்த சாலை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார். இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர், லிட்டில் இந்தியா பகுதியில், கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமான பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டன. சிங்கப்பூர் போலீசார் கலவரத்தை ஒடுக்கி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கைது செய்தனர். இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த, ஏழு இந்தியர்களை போலீசார் விடுதலை செய்துள்ளனர். 28 இந்தியர்கள் மீது, பொதுச் சொத்துகளை நாசம் செய்தல், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையான காரியங்களில் ஈடுபடுதல், போன்ற ஏராளமான குற்றப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த, 52 பேர், வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உட்பட, 53 பேரை, சிங்கப்பூர் அரசு, அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப, உத்தரவிட்டு உள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட, 200 பேருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments