ஒரு சிபாரிசு கடிதத்துக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம்: அதிர வைத்த எம்.பி.,க்கள்

புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்களில் கச்சா எண்ணெய் எடுக்க பரிந்துரை செய்து சிபாரிசு கடிதம் அளிக்க ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 50 லட்சம் வரை லஞ்சம் கேட்டு அதிர வைத்துள்ளனர் நமது எம்.பி.,க்கள்.
சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற பெரும் வெற்றிக்கு தலைநகரில் பரவியிருக்கும் லஞ்ச லாவண்யமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ள மனமில்லாமல், தொடர்ந்து தமது பணிகளில் (!) கண்ணும் கருத்துமாக பணியாற்றி வருகின்றனர் நமது எம்.பி.,க்கள். கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணையதளம் நமது எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக போலியான எண்ணெய் நிறுவனம் ஒன்றின் பெயரில், வடகிழக்கு மாநிலங்களில் கச்சா எண்ணெய் எடுக்க பெட்ரோலியத்துறைக்கு சிபாரிசு செய்யும்படி சில லோக்சபா எம்.பி.,க்களை அணுகியுள்ளனர். "ஆபரேஷன் பால்கன் கிளா" என பெயரிடப்பட்ட இந்த செயல்பாட்டில், சில எம்.பி.,க்கள் கடிதம் தர மட்டுமல்லாது, அந்த கம்பெனிக்காக பெட்ரோலியத்துறையில் லாபி செய்யவும் தனியாக பேமென்ட் பேசி அதிர வைத்துள்ளதாக தெரிவிக்கிறது கோப்ரா போஸ்ட்.

காங்கிரஸ், பா.ஜ., பகுஜன், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 11 எம்.பி.,க்கள் கோப்ரா போஸ்ட்டின் இந்த ஆப்ரேஷனில் சிக்கியதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் 6 எம்.பி.,க்கள் சிபாரிசு கடிதத்திற்கு ரூ. 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டுள்ளதாக தெரிகிறது. மற்றவர்கள் ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக கடிதம் தர முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஒரு எம்.பி., மட்டும் ரூ. 50 லட்சம் கேட்டு அசர வைத்துள்ளார். இதில் கோப்ரா போஸ்ட் நிறுவனம் சிலாகித்து கூறுவது, ஒருவர் கூட மெடிடேரியன் என்ற அந்த நிறுவனம் உண்மையான நிறுவனம் தானா என்பதை கூட அறிய எம்.பி.,க்கள் ஆர்வப்படவில்லை என்பது தான். இதிலும் சில எம்.பி.,க்கள் மெடிடேரியன் நிறுவனத்திற்காக பெட்ரோலியத்துறை அமைச்சகத்தில் லாபி செய்யவும் முன்வந்துள்ளனர்.


அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மறுப்பு:

இந்நிலையில், சிபாரிசு கடிதம் அளிக்க தாங்கள் லஞ்சம் ஏதும் பெறவில்லை என அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் பொள்ளாச்சி சுகுமார் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Comments