மாணவி பலாத்காரம்: 5 போலீசார் கைது: வெகுண்டெழுந்த மக்கள் சரமாரி தாக்கு

சண்டிகர்: குடும்ப தகராறு காரணமாக, பள்ளி மாணவியை விசாரணைக்கு அழைத்து, துப்பாக்கி முனையில் மிரட்டி, போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தனர். வெகுண்டெழுந்த பொதுமக்கள், போலீசாரை அடித்து உதைத்தனர்.
பஞ்சாப் மாநிலம், சண்டிகரில், குடும்ப தகராறு காரணமாக, பள்ளி மாணவி ஒருவரை, போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வரும்படி, காவலர் ஒருவர் அழைத்துள்ளார். இதற்காக, போலீஸ் ஸ்டேஷன் வந்த, அந்த மாணவியிடம், குற்றப்பிரிவில் பணியாற்றும் காவலர், சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின், மாணவியை, போலீஸ் வேனில் ஏறும்படி மிரட்டியுள்ளார். உடன், போலீஸ் கன்ட்ரோல் ரூமில் பணியாற்றும், சக போலீசார் நான்கு பேரை அழைத்து சென்று, வேனிலேயே, அந்த மாணவியை, ஐந்து பேரும் மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், உருக்குலைந்த அந்த மாணவி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்து பெற்றோர், உறவினர்கள், அப்பெண்ணை காப்பாற்றி விசாரித்த போது, போலீஸ் கும்பலின் வெறியாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகளிடம், புகார் தெரிவித்தனர். இது பற்றிய செய்தி, கடந்த வாரம் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவி, மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்தார். மேலும், தன்னை பலாத்காரம் செய்த, ஐந்து போலீசாரை அடையாளம் காட்டினார். இதையடுத்து, ஐந்து போலீசாரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த, நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு, போலீசார் அழைத்து வந்தனர். இதை பற்றி கேள்விப்பட்டதும், அப்பகுதி மக்கள், மருத்துவமனைக்கு சென்று, போலீஸ் பாதுகாப்பையும் மீறி, காமக்கொடூர போலீசாரை சரமாரியாக தாக்கினர். பாதுகாப்புக்கு சென்ற, போலீஸ் அதிகாரிகள், அதை தடுக்க முடியாமல் திணறினர்.

Comments