யானைகளை முறையாக பராமரிக்காது சீரற்ற கடினமான தரையில் நிற்க
வைப்பதாகவும், போதுமான ஓய்வு அளிப்பதில்லை எனவும் அவைகள் கடுமையாக
நடத்தப்படுவதாகவும், முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் மாண்புமிகு
முதல்வர் கவனத்திற்கு 2003-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தால் யானைகள் பல இடங்களில் அமைதி
இழந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, திருக்கோயில்களில் உள்ள யானைகளை, தொடர்ந்து பணியில்
ஈடுபடுத்தாமல் போதுமான ஓய்வு தரவும் சத்தான உணவளித்து யானைகளை முறையாக
பராமரிக்கவும், உடல் நலத்தைப் பேணவும், தேவையான ஆலோசனையும், சிகிச்சையும்
அளிக்க வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தினார்.
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் திட்டம் அனைத்து தரப்பினராலும் சிறப்பாக
பாராட்டப்பட்டதுடன், இதன் பயன்கள் சமுதாயத்தில் உணரப்பட்டது.
இந்நலவாழ்வு முகாம் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை
நடத்தப்படவில்லை. இதனால் யானைகளின் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை
அறிந்து, யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், 2011-2012,
2012-2013-ஆம் ஆண்டுகளில் முதல்வர் ஆணைப்படி, மீண்டும் யானைகள் சிறப்பு
நலவாழ்வு முகாம் நடைபெற்றது.
இந்த வரிசையில் 2013-14ஆம் ஆண்டிற்கான யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமை, 48
நாட்களுக்கு கோவை தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய
பவானி ஆற்றுப்படுகையில் நடத்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், முகாமில் கலந்துகொள்ள உள்ள 43 யானைகளுக்காக மொத்த செலவுத் தொகை
ரூ.78.00 இலட்சத்தையும் அரசு ஏற்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments