
பாலாசூர்: கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் படைத்த, அக்னி - 3
ஏவுகணை, நேற்று, ஒடிசாவின் வீலர் தீவில், மீண்டும் சோதனை செய்து
பார்க்கப்பட்டது. அக்னி 3 ஏவுகணை, 3,000 கி.மீ.,க்கு அதிகமான தூரத்திற்கு
அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. நேற்று, தன் இலக்கை
துல்லியமாகத் தாக்கியது. இது ஏவப்பட்டதிலிருந்து, இலக்கை சென்று தாக்கும்
வரை, ரேடார்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இச்சோதனை, வெற்றிகரமாக நடந்ததாக, ராணுவ ஆய்வு வளர்ச்சி அமைப்பின் செய்தி
தொடர்பாளர் ரவிகுமார் குப்தா தெரிவித்தார். கடந்தாண்டு, இதே வீலர் தீவில்
இருந்து, மேம்படுத்தப்பட்ட ஏவுகணையின் முதல் சோதனை நடந்தது. தற்போது
இரண்டாவது முறையாக நடந்துள்ளது. அக்னி - 3 ஏவுகணை, 1.5 டன் வெடிபொருளை
சுமந்து செல்லும் திறன் பெற்றது.
Comments