சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான 3வது அணியில் இடம்பெறும்
கட்சிகள் குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று காந்திய மக்கள்
இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்
அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில்
செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது:
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்ற
வேண்டும், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை
விடுவிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை.
அதற்காக தமிழகத்தில் பாஜக தலைமையில் 3-வது அணி அமைப்பதற்கான முயற்சியில்
ஈடுபட்டுள்ளேன். பாஜக கூட்டணியில் இணைய உள்ள கட்சிகள், இணைய விருப்பம்
தெரிவித்துள்ள கட்சிகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அதில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து வரும் டிசம்பர் 16 ந்
தேதியன்று அறிவிக்க இருக்கிறேன்.
பாஜகவை மதவாதக் கட்சி என்று குற்றம்சாட்டுகின்றனர். இதையே எவ்வளவு
காலத்துக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? இந்து - முஸ்லிம்
சமுதாயங்களுக்கு இடையே எவ்வுளவு காலத்துக்குத் தான் பகைமையை வளர்ப்பார்கள்?
மதச்சார்பின்மை என்ற முகமூடிதான் காங்கிரஸின் ஒரே கொள்கையாக உள்ளது.
இனியும் அவர்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
Comments