சுற்றுச்சூழல்
பிரச்னை, "யார்டு' ஒப்பந்ததாரர்கள் முறைகேடு போன்ற காரணங்களால், தமிழகம்
முழுவதும், 45க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
தட்டுப்பாடு காரணமாக, இரண்டரை யூனிட் மணல் வாங்க, 22 ஆயிரம் ரூபாய் வரை,
பொதுமக்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம்
மாவட்டத்தில், பழையசீவரம், கள்ளபிரான்புரம் உள்ளிட்ட இடங்களில், அரசு மணல்
குவாரிகளில், "யார்டு' நடத்த அனுமதி வாங்கியவர்கள், குவாரிகளில்,
அளவுக்கதிகமாக மணல் எடுப்பது, கூடுதல் விலைக்கு விற்பது என, பல்வேறு
முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமானது. இப்பிரச்னையால், கலெக்டர் உள்ளிட்ட,
சில அதிகாரிகள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், "யார்டு'
ஒப்பந்ததாரர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்கள் வைத்திருந்த, 95 ஆயிரம் லோடு
மணல், பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும், மணல் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ள நிலையில், இங்கு பறிமுதல் செய்யப்பட்ட மணலை, நேரடி விற்பனை
முறையில், மக்களுக்கு வழங்க, அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி,
நவம்பர், 26ம் தேதி, ஏல முறையில் மணல் விற்பனை துவங்கியது. ஆனால், ஒரே
நேரத்தில், அதிக எண்ணிக்கையில் லாரி உரிமையாளர்கள் குவிந்ததால், சட்டம்
ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
நேரடி விற்பனை:
இதையடுத்து, "இரண்டு யூனிட் கொண்ட ஒரு லோடு மணல், 2,500 ரூபாய்' என்ற விலையில் நேரடி விற்பனை முறையில், லாரிகளுக்கு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதன்படி, லாரி ஆர்.சி., புத்தகம், அடையாள சான்றுடன் வருவோர், மணல் விலை, வாட் வரி, லோடிங் செலவு சேர்த்து, 2,760 ரூபாய் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். இந்த ரசீதை காட்டி, லாரியில் மணலை ஏற்றிக் கொள்ளலாம். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல், வெளியிடங்களில் இருந்து வரும் லாரி உரிமையாளர்கள், உள்ளூர் மக்களை பயன்படுத்தி, ரசீது வாங்கி விடுகின்றனர். இதனால், அதிக நேரம் காத்திருக்காமல் மணல் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், பழைய சீவரம் பகுதியில், 40 ஆயிரம் லோடு; கள்ளபிரான்புரத்தில், 40 ஆயிரம் லோடு மணல் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், நேரடி விற்பனை மூலம், இப்போது வரை, 14 ஆயிரம் லோடு விற்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிக விலை ஏன்?
பொதுப்பணித் துறையிடம், 2,760 ரூபாய் செலுத்தினாலே, இரண்டு யூனிட் மணல் கிடைக்கும் நிலையில், பொதுமக்களுக்கு இன்னும், ஒரு லோடு மணல், 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. "யார்டு'களில் தனியார் ஒப்பந்ததாரர்கள், ஒரு யூனிட் மணலை, 2,500 முதல், 3,500 ரூபாய் வரை விலை வைத்து விற்ற போது, பொதுமக்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் விலையில் மணல் கிடைத்தது. அப்போது, "யார்டு ஒப்பந்ததாரர்களே விலை உயர்வுக்கு காரணம்' என, லாரி உரிமையாளர்கள் கூறி வந்தனர். ஆனால், இப்போது, அரசே, 2,500 ரூபாய்க்கு மணலை வழங்கும் போதும், மணல் விலை, 20 ஆயிரம் ரூபாயாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மணல் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், "வரிசையில் நின்று ரசீது பெறுவதில் உள்ளூர் மக்கள் ஆதிக்கம், போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால், ஒரு லோடு மணலை, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றனர்.
Comments