'ஹீரோ' விஜய் நடிக்க வந்து இன்றுடன் 21 வருஷமாகிடுச்சுங்கண்ணா!

சென்னை: இளையதளபதி விஜய் ஹீரோவாக நடிக்க வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவர் 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதையடுத்து விஜய் ஹீரோவாக கோலிவுட்டுக்கு வந்தார்.

விஜய்யை அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தான் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.


நாளைய தீர்ப்பு

விஜய் ஹீரோவாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்த படம் 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸானது. விஜய்யின் அம்மா சோபா தயாரிக்க அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய இந்த படத்திற்காக விஜய்க்கு சிறந்த புதுமுக நடிகருக்கான சென்னை எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது.

ஒரு வட்டம்

செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என்று அடுத்தடுத்து விஜய் நடித்த படங்களை அவரது அப்பா தான் இயக்கினார். இப்படி ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருந்த விஜய்க்கு ஒரு இயக்குனர் மூலம் பெயரும், புகழும் கிடைத்தது.

பூவே உனக்காக

கீர்த்தனா, சங்கவியுடன் ஒரே பாணியில் நடித்துக் கொண்டிருந்த விஜய்யை புதிய வெளிச்சத்தில் பூவே உனக்காக படம் மூலம் நமக்கு காண்பித்தவர் இயக்குனர் விக்ரமன். படம் சக்கை போடு போட்டது. விஜய்யின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

காதலுக்கு மரியாதை

பூவே உனக்காக படத்தை அடுத்து விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இருப்பினும் பாசில் இயக்கத்தில் ஷாலினியுடன் சேர்ந்து விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படம் சூப்பர் ஹிட்டானது. விஜய்க்கு சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதும் கிடைத்தது.

துள்ளாத மனமும் துள்ளும்

விஜய்யும், சிம்ரனும் ஜோடி சேர்ந்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ஹிட்டானது. விஜய், சிம்ரன் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. படத்தின் பாடல்களும் ஹிட்டாகின.

குஷி

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது. ஒரு இடுப்பால் இவ்வளவு பிரச்சனையா விஜய்க்கு என்று பலகாலம் பேசப்பட்ட படம்.

கில்லி

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா ஜோடி சேர்ந்த படம் கில்லி.
படத்தில் கபடி வீரராக வந்து விஜய் அசத்தியிருப்பார். படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் த்ரிஷாவை பார்த்து கூறிய ஐ லவ் யூ செல்லம் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

போக்கிரி

பிரபுதேவா விஜய்யை வைத்து இயக்கிய ஹிட் படம் போக்கிரி. இதில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார்.

தொடர்ந்து பிளாப்

குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் நடித்த படங்கள் தொடர்ந்து ஊத்திக் கொண்டன. அப்பொழுது தான் அவருக்கு கை கொடுத்தது காவலன் படம்.

நண்பன்

3 இடியட்ஸ் இந்தி படத்தை ஷங்கர் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடித்திருந்தனர். ஷங்கர் முதல்முதலாக ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படம் ஓடியது. இதையடுத்து துப்பாக்கி 2 படத்தை எடுக்கிறார்கள்.

தலைவா

தலைவா படம் விஜய்யின் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத படம். காரணம் படத்தை வெளியிட விஜய் அவ்வளவு பாடுபட்டார். இதையடுத்து எனக்கு அரசியல் பஞ்ச் வசனங்களே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டார்.

ஜில்லா

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

21 ஆண்டுகள்

விஜய் ஹீரோவாக நடிக்க வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஏற்றத்தாழ்வு கண்டபோதிலும் கோலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ளார் அவர். வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் விஜய்.

Comments