வெளி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியினர், தொகுதி முழுவதும், இரவோடு, இரவாக வழங்கி முடித்தனர். தி.மு.க., சார்பில், இரண்டாம் கட்டமாக, 500 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.
பிரசாரம்:
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல், வரும், 4ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க.,
வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா, தொகுதிக்கு உட்பட்ட ஒன்பது
இடங்களில், பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க., சார்பில் போட்டியிடும் மாறனை
ஆதரித்து, ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலுக்கு, இன்னும்
மூன்று நாட்களே உள்ளதால், வாக்காளர்களை கவனிக்கும் பொறுப்பு வெளி மாவட்ட
கட்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முதல்கட்டமாக, வேட்டி,
சேலை, காமாட்சி விளக்கு, பணம் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதியில் தேர்தல்
பணியாற்றிய அமைச்சர்கள் வழங்கிவிட்டனர்.
உத்தரவு:
இரண்டாம்
கட்டமாக, பணம் வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு
செய்திருந்தனர். முதல்வர் பிரசாரம் முடிந்த கையோடு, அந்த திட்டத்தை
நிறைவேற்ற, தலைமை நிர்வாகிகள் மூலம் அமைச்சர்களுக்கு
உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தை
முடித்துவிட்டு, சென்னை திரும்பியதும், அ.தி.மு.க.,வினர், நள்ளிரவு, 12:00
மணி முதல், அதிகாலை, 5:30 மணிக்குள், வீடு, வீடாக சென்று, ஓட்டுக்கு தலா,
2,000 ரூபாய் பணம், வேட்டி, சேலைக்கு தனியாக, 500 ரூபாய் வீதம்
வினியோகித்தனர். மின்னாம்பள்ளி, காரிப்பட்டி, கருமாபுரம்,
அயோத்தியாபட்டணம், செல்லியம்பாளையம், சின்னகவுண்டாபுரம், வெள்ளாளகுண்டம்,
வலசையூர், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில், இந்த பணி ஜோராக நடந்து
முடிந்துள்ளது.
அதிர்ச்சி:
தொகுதி முழுவதும், பெரும்பாலான வாக்காளர்களுக்கு பணம் சென்று சேர்ந்துள்ளது. தி.மு.க.,வினரும், தங்கள் பங்குக்கு, 500 ரூபாயை வீடு, வீடாக சென்று வழங்கினர். ஒவ்வொரு பகுதியிலும், நோட்டை வைத்துக்கொண்டு, பணம் கொடுத்த நபர்களின் பெயர்களை, இரு கட்சியினரும் குறிப்பெடுத்தபடி இருந்தனர்.
மின்னாம்பள்ளியைச் சேர்ந்த, பெயர் கூற விரும்பாத பெண் ஒருவர் கூறியதாவது: அதிகாலை, 4:00 மணிக்கு, ஐந்து பேர் காரில் வந்து இறங்கினர். ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டி, 'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள்' எனக் கூறி, ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வீதம் கொடுத்தனர். வேட்டி, சேலைக்கு தனியாக, 500 ரூபாய் கொடுத்தனர். திடீரென இரவு நேரத்தில், வீட்டு கதவை தட்டுவதை கண்டு, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பணத்தை கொடுத்துவிட்டு, வந்தவர்களில் ஒருவர், காலில் விழுந்து, 'கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும்' என, கூறினார். தி.மு.க., தரப்பில் ஏற்கனவே, 500 ரூபாய் கொடுத்துவிட்டனர். மீண்டும் பணம் கொடுக்க வரவில்லை. பணத்தை வாங்கிவிட்டதால், யாருக்கு ஓட்டு போடுவது? என்கிற குழப்பத்தில் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Comments