அணு ஆயுதம்:
இதுகுறித்து, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும். இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக தீராத பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே, மூன்று முறை, இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும், இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு அணு ஆயுதப் பிரயோகம் நிகழ்ந்தால், 200 கோடி பேர், கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை, உலக மக்கள் தொகையில், நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஏராளமானோர் கொல்லப்படலாம். இந்த இரு நாடுகளைத் தவிர, சீனாவிலும் இதன் தாக்கம் காணப்படும்.
ஹிரோஷிமா:
அமெரிக்கா - ஜப்பான் இடையே, 1945ம் ஆண்டு, நடந்த போரில், ஜப்பான் மீது அமெரிக்கா, இரு சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை வீசியது. இதில் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாயின. இந்த நகரங்களில் இன்றளவும் அதன் தாக்கம் உணரப்படுகிறது. எனினும், இந்தியா - பாக்., இடையே நிகழும் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டால், ஜப்பானை விட மோசமான பாதிப்பை சந்திக்க நேரிடும். இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments