லோக்சபா தேர்தல் கூட்டணி - தமிழக காங்கிரசின், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், 19ம் தேதி நடத்தப்படுகிறது

லோக்சபா தேர்தல் கூட்டணி வாய்ப்பு குறித்து விவாதிக்க, தமிழக காங்கிரசின், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், 19ம் தேதி நடத்தப்படுகிறது. நிர்வாகிகள் நியமனத்துக்கு பின், நடக்கும் இந்த முதல் கூட்டத்தைப் புறக்கணிக்க, சிதம்பரம், ஜெயந்தி, தங்கபாலு கோஷ்டியினர்
திட்டமிட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி உத்தி குறித்து, தமிழகத்தில் எல்லா கட்சிகளும், ஆலோசனை நடத்த ஆரம்பித்து விட்டன. ஆனால், தமிழக காங்கிரசில், இதுவரை, எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
இதற்காக, கட்சியின் மூத்த தலைவர்கள் சிதம்பரம், வாசன், தங்கபாலு உள்ளிட்ட, 25 பேர் அடங்கிய, ஒருங்கிணைப்புக் குழுவை, டில்லி மேலிடம், ஏற்கனவே நியமித்துள்ளது. அறிவித்து, ஒன்றரை மாதம் ஆகியும், இக்குழு, ஒரு முறை கூட கூட்டப்படவில்லை.ஆனால், மற்ற கட்சிகள் எல்லாம், மேல்மட்ட ஆலோசனையை முடித்து, பொதுக்குழு, செயற்குழு கூட்டத் தயாராகி விட்டன. தி.மு.க.,வின் பொதுக்குழு, நாளை கூடுகிறது; அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 19ம் தேதி நடக்கிறது.

கூட்டணி பேச்சு :செயற்குழுவைக் கூட்டி, தே.மு.தி.க., விவாதம் நடத்தி முடித்துள்ளது. தமிழக பா.ஜ.,வில், கூட்டணிப் பேச்சு துவங்கி விட்டது.இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின், தமிழக காங்கிரசில், நிர்வாகிகள் நியமனம் நடந்துள்ளது. 17 துணைத் தலைவர்; 29 பொதுச் செயலர்; ஒரு பொருளாளர் என, மாநில நிர்வாகிகளாக, மொத்தம் 47 பேர், கட்சியில் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், கட்சியில் உள்ள, 54 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, மாநில செயற்குழுவில், 41 பேர், இடம் பெற்றுள்ளனர். இதுவரை, நிர்வாகிகள் இன்றி செயல்பட்டு வந்த, தமிழக காங்கிரஸ் கட்சி, இப்போது புதிய நிர்வாகிகள் வந்து விட்டதால், முதல் முறையாக, தேர்தல் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும், 19ம் தேதி, மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. அன்று காலை, துவங்கும் கூட்டத்திற்கு வருமாறு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, 54 மாவட்டத் தலைவர்களுக்கும், அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.ஆனால், இந்த முதல் கூட்டத்திற்கு, 54 பேரும் வருவரா என்ற கேள்வி எழுந்து, தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு ஆகியோர், இந்த கூட்டத்தைப் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது தான் இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, இந்த கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் சிலர் கூறியதாவது:சிதம்பரம், ஜெயந்தி, தங்கபாலு ஆகியோர், 19ம் தேதி கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதற்கு காரணம், மத்திய அமைச்சர்வாசன் தான். கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டம், 19ம் தேதி நடக்கும்போது, இவர், தன் ஆதரவு மாவட்டத் தலைவர்களை மட்டும், முன்கூட்டியே சென்னையில் அழைத்துப் பேசுகிறார்.மாவட்டத் தலைவர்களில், வாசன் ஆதரவாளர்கள், 22 பேர் உள்ளனர். மாநில நிர்வாகிகளில், 23 பேர் வரை இருக்கின்றனர். ஆனால், கட்சியின் மாநில செயற்குழுவிலும், ஒருங்கிணைப்பு குழுவிலும், அவருக்கு ஆதரவாளர்கள் குறைவு. எனவே, ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இதுவரை நடத்தப்படவே இல்லை.தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க, முதலில், மாநில செயற்குழுவைத் தான் கூட்டியிருக்க வேண்டும். ஏனெனில், அதில் தான், முன்னணி தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த கூட்டத்தைக் கூட்டாமல், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியிருப்பது ஏன்?மாவட்டத் தலைவர்களில், வாசன் ஆதரவாளர், 22 பேர்; இளங்கோவன் ஆதரவாளர், ஏழு பேர் உள்ளனர். இவர்கள் இருவரும், ஓரணியில் உள்ளனர். எனவே, ஆதரவாளர்கள் அதிகம் என்பதால், அவர்களது கருத்து மட்டுமே எதிரொலிக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.அதிலும், தன் ஆதரவாளர்களை மட்டும் தனியாக அழைத்து, இன்று தன் வீட்டில் சந்திக்க, வாசன் ஏற்பாடு செய்துள்ளார். கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்படும் போது, இவர் எதற்காக தனிக்கூட்டம் நடத்த வேண்டும்?
இதனால், 19ம் தேதி நடக்கும் கூட்டத்தைப் புறக்கணிக்க, நாங்கள் முடிவு செய்துள்ளோம். மாவட்டத் தலைவர்களில், சிதம்பரம் ஆதரவாளர், ஏழு பேர்; தங்கபாலு ஆதரவாளர், எட்டு; பிரபு, இரண்டு; ஜெயந்தி, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, மாணிக் தாகூர், ஆருண் ஆகியோருக்குதலா ஒரு ஆதரவாளர் என, உள்ளனர்.இவர்களில், 20 பேர் வரை, அந்த கூட்டத்தைப் புறக்கணிப்பர். மாநில நிர்வாகிகள், 47 பேரில், வாசன் ஆதரவாளர்கள், 23 பேர்; சிதம்பரம், ஏழு; இளங்கோவன், ஆறு; தங்கபாலு , ஐந்து; ஜெயந்தி நடராஜன், இரண்டு; கிருஷ்ணசாமி, இரண்டு; பிரபு ஒன்று என, ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்களில், வாசன், இளங்கோவன் ஆதரவாளர்கள் மட்டுமே, அன்றைய தினம் நடக்கும் கூட்டத்துக்கு வருவர்; மற்றவர்கள் புறக்கணிப்பர்.மாநில, மாவட்ட நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ள, சிதம்பரம் ஆதரவாளர்கள் யாரும், இதுவரை சத்தியமூர்த்தி பவன் பக்கமே போகவில்லை. இந்த விஷயத்தில், அவர்களுடன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் ஆதரவாளர்களும் இணைந்துள்ளனர். இதனால், வாசன் அணியினர் 19ம் தேதி கூட்டப்பட்டிருக்கும் கூட்டத்தின் வாயிலாக, தேர்தல் தொடர்பாக எந்த முடிவெடுத்தாலும், அதை சிதம்பரம், தங்கபாலு, ஜெயந்தி கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால், குழப்பம் தான் ஏற்படும்.இவ்வாறு, அந்த கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

Comments