தான்சானியா இரட்டை குழந்தைகள் : 18 மணி நேர ஆபரேஷனில் வெற்றிகரமாக பிரிப்பு

சென்னை: இடுப்புக்கு கீழ் ஒட்டிப் பிறந்த, தான்சானியா நாட்டுக் குழந்தைகளை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் குழு, 18 மணி நேர, ஆபரேஷன் செய்து வெற்றிகரமாக பிரித்துள்ளது. "ஆறு மாதத்திற்குப் பின், மேலும் ஒரு, ஆபரேஷன் செய்யப்படும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர், கிரேஸ்வக் பூஜா. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், உடல் ஒட்டிப் பிறந்தன.
முதுகுத் தண்டு வட கீழ்பகுதி, சிறுநீர் பாதை, ஆணுறுப்பு, மலம் செல்லும் பாதைகளும் ஒட்டியிருந்தன. இந்த குழந்தைகளை பிரித்தெடுக்க, தான்சானியா அரசும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையும், ஒப்பந்தம் செய்திருந்தன. இதைத் தொடர்ந்து, குழந்தைகளை பிரித்தெடுக்க, ஜூன் மாதம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆபரேஷனுக்கு தயாரான நிலையில், சென்னை, வானகரத்தில் உள்ள, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், ஆபரேஷன் நடந்தது.

சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர், வெங்கட்ஸ்ரீபதி, அறுவைச் சிகிச்சை நிபுணர், ரோஷினி மற்றும், 25 டாக்டர்கள் கொண்ட குழு, 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு தொடங்கி, 18 மணி நேரம் முயற்சித்து, குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது.

இதுகுறித்து, நிபுணர், வெங்கட்ஸ்ரீபதி கூறியதாவது: மருத்துவ வரலாற்றில், இதுவரை, 30 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 26 பெண் இரட்டைக் குழந்தைகள்; நான்கு ஆண் இரட்டைக் குழந்தைகள். ஐந்தாவது, ஆண் இரட்டைக் குழந்தைகளாக, இக்குழந்தைகள் பிறந்துள்ளன. ஆபரேஷன், வெற்றிகரமாக முடிந்து, குழந்தைகள் பிரிக்கப்பட்டுள்ளன. பூரண நலம் பெற்றதும், "டிஜ்சார்ஜ்' செய்யப்படுவர். ஆறு மாதங்களுக்குப் பின், குழந்தைகளுக்கு, ஆண் குறி துளை சரி செய்தல், பெருங்குடல் திறப்பு சிகிச்சை செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார். குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்த, டாக்டர்கள் குழுவை, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி பாராட்டினார். பேட்டியின்போது, லண்டன் சிறப்பு நிபுணர் எட்சர்ட் ஹெல்லி, தான்சானியா டாக்டர் ஹெல்லி தோலக்கா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments