ரூ.175 கோடி வரி செலுத்த வேண்டும்: மொபைல் போன் நிறுவனத்துக்கு அரசு "கிடுக்கிப்பிடி'

"ஏர்செல்' நிறுவனம், தன் மொபைல் போன் டவர்களை மற்ற நிறுவனத்திற்கு விற்ற வகையில், 175 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும்' என, வணிக வரித்துறை "கிடுக்கிப்பிடி' போட்டுள்ளது.
தமிழகத்தில், "ஏர்செல்' நிறுவனம், சந்தாதாரர்களுக்காக, மொபைல் போன் கோபுரங்களை பல இடங்களிலும் அமைத்தது. இந்த நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கோபுரங்களை, மற்றொரு நிறுவனத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தமிழக அரசுக்கு, 175 கோடிரூபாய் வரி செலுத்த வேண்டும் என, வணிக வரி"த்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த வரியை, நிறுவனத்திடம் பெறும் வகையில், வணிக வரித்துறை, 'கிடுக்கிப்பிடி' நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனம் ஒன்றை மொத்தமாக விற்கும்போது, அதற்காக வணிக வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், குறித்த பகுதிகளை விற்கும்போது, அதற்கான வணிக வரி செலுத்த வேண்டும். அதன்படி, "ஏர்செல்' நிறுவனம், 2010 11ல், தன், டவர்களை விற்றுள்ளது. இந்த வகையில், 175 கோடி ரூபாய் வரியை, தமிழக அரசுக்கு செலுத்தி இருக்க வேண்டும்; ஆனால், அதன்படி செலுத்தவில்லை. இதைக் கண்டறிந்து, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால், குறித்த தொகையைச் செலுத்த வேண்டும். அதன்படி, 17 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. அரசின் நடவடிக்கைளுக்கு எதிராக, நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. இதில், அரசுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments