லோக்சபா தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து, விவாதிக்க, தி.மு.க., பொதுக்குழு, இம்மாதம் 15ம் தேதி, சென்னையில் கூடுகிறது
லோக்சபா தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து, விவாதிக்க, தி.மு.க.,
பொதுக்குழு, இம்மாதம் 15ம் தேதி, சென்னையில் கூடுகிறது. அதற்குள், ஐந்து
மாநில தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும் என்பதால், அதற்கேற்ப,
தி.மு.க.,வின் தேர்தல் யுக்தி மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கட்சியில் நடந்து வந்த உள்கட்சித் தேர்தல்கள், ஏற்காடு இடைத்தேர்தல் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உள்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, டிசம்பர், 1ம் தேதி, பொதுக்குழு கூடும்
என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4ம் தேதி ஏற்காட்டில் ஓட்டுப்பதிவு, 8ம் தேதி ஐந்து மாநில தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை போன்ற காரணங்களால், பொதுக்குழு தேதி, தள்ளிப் போகும் எனக் கூறப்பட்டது. அதன்படி, "வரும், 15ம் தேதி, சென்னை அறிவாலயத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்' என, தி.மு.க., தலைமை நேற்று அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பது, யூகிக்கக்கூடிய ஒன்று என்பதால், பொதுக்குழு விவாதம் முழுவதும், கூட்டணி பற்றியதாகத் தான் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், காங்கிரஸ் தலைமையிலான, "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி'யில் இணைந்து, தமிழகத்தில், தி.மு.க., களம் இறங்கியது. அந்த கூட்டணியை விட்டு விலகியுள்ள நிலையில், தி.மு.க.,வின் கூட்டணி வியூகம் கேள்விக்குறியாகி உள்ளது. காங்கிரசுடன் மீண்டும் உறவு மலருமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அதற்கு, அரசியல் ரீதியாக பல காரணங்கள், தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: "2ஜி' ஊழல் விவகாரத்தில், எங்கள் கட்சிக்கு எதிராக திரும்பிய விசாரணை; இலங்கை தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் செயல்பாடு; ஏற்காடு தேர்தலில், எங்களுக்கு ஆதரவு அளிக்க மறுப்பு ஆகிய விஷயங்கள், முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இந்த விவகாரங்கள், பொதுக்குழு விவாதத்தில் நிச்சயம் எதிரொலிக்கும். மேலும், கூட்டணி விஷயத்தில், கட்சித் தலைமை குழப்பத்தில் உள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடிதம் எழுதியதைப் போலவே, பா.ஜ., மற்றும் தே.மு.தி.க.,விடமும், தலைவர், ஆதரவு கேட்டார். இது, இந்த கட்சிகளுடன் கூட்டணி சேரத் தயார் என்பதற்கான, "சிக்னல்' மட்டுமல்ல; காங்கிரஸ் மீதான எங்கள் தலைவரின் அதிருப்தியையும் காட்டுகிறது. அதோடு நிற்காமல், தேசிய விவகாரங்களில், அடிக்கடி கருத்து கூறும் எங்கள் தலைவர், சமீபத்தில், பா.ஜ.,வையோ, அதன் பிரதமர் வேட்பாளர், மோடியையோ, விமர்சிக்கவில்லை. அதற்கு காரணம், ஐந்து மாநில தேர்தல். டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அதில், காங்கிரஸ் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. "மினி லோக்சபா தேர்தல்' என, வர்ணிக்கப்படும் இந்த தேர்தலில், எந்த கட்சி, அதிக மாநிலங்களைப் பிடிக்கப் போகிறதோ, அந்த கட்சிக்கு தான் லோக்சபா தேர்தலில் ஆதரவு கிடைக்கும் என்ற கணிப்புகள் வெளியாகி உள்ளன. எனவே, "இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணி வியூகத்தை தீர்மானிக்கலாம்' என, எங்கள் தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும், டிச., 8ம் தேதிக்கு பிறகு, டிச., 15ம் தேதி, பொதுக்குழுவை கூட்டியுள்ளது. தமிழகத்தில, தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை இணைத்து, "ஜம்போ' கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்பது, எங்கள் கட்சி தலைமையின் திட்டம். அதற்கு முன், தேசிய அளவில், எந்த கட்சியுடன் உறவு என்பதையும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. அது, காங்கிரசா அல்லது பா.ஜ.,வா என்ற கேள்விக்கு, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மூலம் விடை கிடைக்கும் என, தலைமை நம்புகிறது. இது பற்றியெல்லாம், பொதுக்குழு உறுப்பினர்களிடம் தலைமை கருத்து கேட்கும்; கூட்டணியை தீர்மானிக்க, அவர்களது கருத்துக்கள் நிச்சயம் உதவும். இவ்வாறு, தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Comments