தேர்தலில் பா.ஜ., அதிரடி பிரசாரம் ; 10 கோடி வீட்டுகதவுகளை தட்ட திட்டம்

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., இருமுனை பிரசார வியூகத்தை வகுத்துள்ளது. இந்த தேர்தலில் ஓட்டுப்போட வலியுறுத்தி, 10 கோடி வீட்டு கதவுகளை தட்டவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் மோடி செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள பா.ஜ., அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியது.
இதற்காக டில்லியில் இன்று நடந்த கூட்டத்தில், பா.ஜ., முக்கிய தலைவர்கள், பா.ஜ., முதல்வர்கள், பார்லி., குழுவின் உறுப்பினர்கள், கட்சியின் மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர்.


நாட்டுக்கு ஓட்டு :

இக்கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பிரசார வியூகம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. மக்களை பெரிதும் கவர்ந்துள்ள பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பயண திட்டம் வரும் பிப்.28ம் தேதி முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. மேலும், 10 கோடி இலலங்களுக்கு நேரில் சென்று, நாட்டுக்காக ஓட்டு போடும்படி வலியுறுத்தவும், நரேந்திரமோடி பிரதமராக வாய்ப்பு தாருங்கள் என்றும் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநில அளவில், கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். பா.ஜ.,விற்கு ஆதரவு தேடும் வகையில் 450க்கும் மேற்பட்ட லோக்சபா தொகுதிகளில்பிரசார கூட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நிதியாக, ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் 10 ரூபாய் முதல் 1000 ரூபாய், தேர்தல் நிதியாக பெறவும் திட்டமிடப்பட்டது.

லோக்சபா தேர்தல் குறித்த பணிகளில் காங்கிரஸ் கட்சி இறங்கி உள்ள நிலையில், பா.ஜ.,வும் கச்சை கட்டி களத்தில் குதிக்க தயாராகிவிட்டது. சமீபத்திய, நான்கு மாநில சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 589 இடங்களில், 407 இடங்களில் வெற்றி பெற்று, பா,ஜ., சாதித்துள்ளது. இந்த வெற்றியை தக்க வைக்கும் வகையில் தான் தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலில், தேர்தல் அறிக்கை முக்கிய இடம் பெறும் என்பதால், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அறிக்கை தயாரிக்கும் பணியும் துவங்கிவிட்டது. தீவிரமான தேர்தல் பிரசாரத்திற்காக அனைத்து மாநிலங்களிலும் பணி அலுவலகங்கள் திறக்கவும், உள்ளூர் பிரச்னைகளுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையில் மாறுதல்கள் செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள், பிரசார கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றின் மூலம் பெரிய அளவிலான ஓட்டு வேட்டையில் இறங்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது .

Comments