ஆட்சி அமைக்க காங். ஆதரவு- முடிவெடுக்க 10 நாள் அவகாசம் தேவை: அரவிந்த் கெஜ்ரிவால்

ஆட்சி அமைக்க காங். ஆதரவு- முடிவெடுக்க 10 நாள் அவகாசம்  தேவை: அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எங்களின் நிபந்தனைகளை ஏற்றால் காங்கிரஸ் தரும் ஆதரவை ஏற்று கொள்ள தயாராக இருப்பதாக ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காததால் டெல்லியில் ஆட்சி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆதரவை ஆம்ஆத்மி ஏற்க தயாராக இல்லை. இந்நிலையில் இந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநரை சந்தித்து தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ்., பா.ஜ.க கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், 10 நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். துணைநிலை ஆளுநரை சந்தித்த பின்னர் வெளியே வந்த அரவிந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது என கூறியிருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. எங்களுக்கு காங்கிரஸ் அளிக்கும் ஆதரவின் நோக்கம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். இது போல் ஜன்லோக்பால் நிறைவேற்ற ஆதரவு அளிப்பார்களா?. பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி உள்ளது. இந்த கட்சிக்கு இன்னும் 4 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவே வேண்டும். இது எளிதானது. ஆனால் பா.ஜ., ஆட்சி அமைக்க மறுத்து வருகிறது. காங்கிரசும், பா.ஜ.,வும் ஜன்லோக்பால் மற்றும் ஆம்ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தங்களின் நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக சோனியா, ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். எங்களின் நிபந்தனைகளை ஏற்று கொண்டால் அவர்களின் ஆதரவை நாங்கள் ஏற்க தயார். நாங்கள் யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை. இரு கட்சிகள் சேர்ந்து எங்களின் நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். எங்களுக்கு பதவி வெறி இல்லை. மின்சார விநியோகத்தில் முறைகேடு நடந்ததை காங்கிரஸ் ஒப்பு கொள்ளுமா ? தண்ணீர் மாபியா கும்பல் பின்னணியில் காங்கிரசும், பா.ஜ.கவும் இருப்பதை ஒப்பு கொள்ளுவார்களா? சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு டெல்லியில் நடைமுறைப்படுத்தாது என்பதை காங்கிரஸ் உறுதி அளிக்குமா? டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தில் காங்கிரஸ், பாஜக தலையீடு இல்லாமல் இருக்க முடியுமா? ஜன்லோக்பால் மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றுமா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார். நீடிக்கும் குழப்பம் டெல்லி சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க 32 இடங்களையும் ஆம்ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இருப்பினும் பா.ஜ.கவும், ஆம்ஆத்மியும் நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர். இதனால் குழப்பம் நீடிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு இந்த குழப்பமான சூழ்நிலையில் ஒரு இடங்களை கைப்பற்றிய ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளது அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆதரவு கடிதத்தை துணைநிலை ஆளுனரிடம் ஒப்படைக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

Comments