தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் பகல் 1 மணிவரை 34% வாக்கு பதிவு!

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் பாஜக, காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளைவிட விஜயகாந்தின் தேமுதிகவுக்குத்தான் மிக முக்கிய'மான' பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. வேறு எந்த தமிழக கட்சிகளும் டெல்லி தேர்தலில் போட்டியிடாத நிலையில் தேமுதிக களம் இறங்கியுள்ளது. தற்போது கடும் குளிருக்கும் நடுவே சற்று மந்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்குப் பதிவால் தேமுதிகவுக்கு டெபாசிட் கூட கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

70 தொகுதிகளைக் கொண்டது டெல்லி மாநில சட்டசபை. இதற்கான தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் விஜயகாந்தின் தேமுதிகவும் 11 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேமுதிகவின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர்கள்

முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பாக ஷீலா தீட்சித், பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஹர்ஷ்வர்தன், ஆம் ஆத்மி கட்சி சார்பாக கெஜ்ரிவால் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 கோடியே 19 லட்சம் வாக்காளர்கள்

இன்றைய தேர்தலில் ஒரு கோடியே 19 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இதில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

810 வேட்பாளர்கள்

70 தொகுதிகளுக்கு மொத்தம் 810 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

களத்தில் யார்? யார்?

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாரதிய ஜனதா கட்சி 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவை தவிர தே.மு.தி.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

திராணி காட்டுமா தேமுதிக

இவற்றில் தேமுதிகதான் டெல்லி தேர்தல் களத்துக்கு புதுசு. தமிழகத்தில் கூட்டணி வைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றியது தேமுதிக. தற்போது ஏற்காடு இடைத்தேர்தலில் கூட போட்டியிடாமல் தவிர்த்துவிட்டது. அத்துடன் எந்த கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடும் எடுக்கவில்லை. ஆனால் டெல்லியில் துணிகரமாக வேட்பாளர்களை களமிறக்கியது. இருப்பினும் டெல்லியில் அதிகளவு வாக்குகள் பதிவாகும் நிலையில் தேமுதிகவுக்கும் கணிசமான வாக்குகள் அட்லீஸ்ட் டெபாசிட்டாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தற்போது கடும் குளிருக்கு நடுவே சற்று மந்தமான வாக்குப் பதிவே நீடித்து வருகிறது. இது தேமுதிகவின் டெபாசிட்டுக்கே உலைவைக்குமோ என்ற பீதியை கிளப்பிவிட்டிருக்கிறது.

சற்று மந்தமான வாக்குப் பதிவு

டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். பகல் 1 மணிவரை 34% வாக்குகள்தான் பதிவாகி இருக்கின்றன.

Comments