சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை : கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், சோதனை ஓட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 4,000 மணி நேரம், சோதனை ஓட்டம் நடைபெறும். அடுத்த ஆண்டு மத்தியில், மெட்ரோ ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில், குடியேறுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, போக்குவரத்து நெரிசலும், அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு பல்வேறு
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மெட்ரோ ரயில்: விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து வசதியை வழங்குவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நோக்கம். இத்திட்டம், கடந்த ஆட்சியில் துவக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், முதல் வழித்தடம், வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான, 23.08 கி.மீ., தூரம் கொண்டது.இரண்டாவது வழித்தடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, செயின்ட் தாமஸ் மவுன்ட் வரை, 21.96 கி.மீ., தூரம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான, திட்ட மதிப்பீடு, 14,600 கோடி ரூபாய். இதில், மத்திய அரசு, பங்கு மூலதனமாக, 15 சதவீதம்; சார்நிலைக் கடனாக, 5 சதவீதம் வழங்குகிறது.தமிழக அரசு, பங்கு மூலதனமாக 15 சதவீதம்; சார்நிலைக் கடனாக, 5.78 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவீதம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து, கடனாக பெறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, 42 ரயில் பெட்டித் தொடர்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, தலா, நான்கு பெட்டிகள் கொண்ட, ஒன்பது ரயில் பெட்டித் தொடர், பிரேசில் நாட்டில் உள்ள, "ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட்' மற்றும் "ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட்' என்ற நிறுவனத்தால், தயாரிக்கப்படுகிறது. மீதம் உள்ள, 33 ரயில் பெட்டித் தொடர்கள், ஆந்திர மாநிலம், தடா அருகில் உள்ள,ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் துவக்கப்பட்ட, அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், தயாரிக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பணிமனை, கோயம்பேடில் அமைக்கப்பட்டுள்ளது.


சோதனை ஓட்டம்:

இப்பணிமனையில், நேற்று, நான்கு பெட்டிகளைக் கொண்ட, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், துவக்க விழா நடந்தது. "விழா, பகல் 2:00 மணிக்கு நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1:40 மணிக்கே, முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை, அமைச்சர் தங்கமணி, மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் ராஜாராமன் ஆகியோர், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.பின், முதல்வரை மெட்ரோ ரயில் பெட்டிக்குள் அழைத்து சென்றனர். ரயிலின் சிறப்பம்சங்களை, ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் விளக்கினர். ரயில் பெட்டிகளை சுற்றி பார்த்துவிட்டு, முதல்வர், 1:45 மணிக்கு, வெளியில் வந்தார். மெட்ரோ ரயிலுக்கு, மின்சாரம் வழங்கும், 25 கி.வோ, உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான, பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார். பின் அங்கிருந்த மேடையில் நின்றபடி, கொடியசைத்து, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை, துவக்கி வைத்தார்.நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில், 800 மீட்டர் தூரம் ஓடி, திரும்பி வந்தது; அனைவரும் கைதட்டி, மகிழ்ச்சியை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சோதனை ஓட்டம், 4,000 மணி நேரம் நடத்தப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது, ரயில் பெட்டித் தொடர், அடுத்த மாதம் வந்து சேர உள்ளன. மீதம் உள்ள, ஆறு ரயில் பெட்டித் தொடர், பகுதிகளாக மார்ச் மாதம், பிரேசில் நாட்டில் இருந்து, கப்பலில் கொண்டு வரப்பட உள்ளன.கோயம்பேடு முதல் மவுன்ட் வரையிலான, முதல் பகுதியில், அடுத்த ஆண்டு மத்தியில், ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பெட்டிகள் சிறப்பம்சம்:

*ரயில் பெட்டிகள், துருப்பிடிக்காத, எக்கால் அமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளது.
*ஒவ்வொரு பெட்டியிலும், எட்டு தானியங்கி கதவுகள் உள்ளன. இவற்றில், இரண்டு அவசரகால கதவு. பெட்டிகளுக்கு இடையே, பயணிகள் எளிதாக செல்வதற்கு, வழித்தடம் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது.
*ரயில் பெட்டித் தொடர், மணிக்கு 80 கி.மீ., செல்லும் திறனை பெற்றிருந்தாலும், சராசரியாக மணிக்கு, 34 கி.மீ., அளவிலே இயக்கப்படும்.
* நான்கு பெட்டிகள் கொண்ட ரயிலில், 176 இருக்கைகள் மட்டும் உள்ளன. அந்த எண்ணிக்கையில் அமர்ந்தபடியும், 1,100 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
*ஒவ்வொரு பெட்டியிலும், எல்.இ.டி., காட்சி மூலம், பயணிகளுக்கான தகவல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அளிக்கப்படுகிறது.
* ஒலிப்பெருக்கி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில், அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகளின், சக்கர வண்டியை நிறுத்த, தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரம் அளவிலே, ரயில் பெட்டி தளம் அமைந்துள்ளதால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், எளிதாக பயணிக்க முடியும்.
* மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், நீண்ட தூர நிறுத்தத்திற்கான பொத்தான், ஒவ்வொரு பெட்டியிலும் உள்ளது. இதை பயன்படுத்தி, நிறுத்தத்திற்கான நேரத்தை நீட்டிக்க முடியும்.
* ஒவ்வொரு பெட்டியிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் வழியே, ரயில் டிரைவர், பெட்டிக்குள் பயணிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.
* பயணிகள் கொண்டு வரும், சிறிய பெட்டி, கைப்பை போன்றவற்றை வைக்க, இரண்டு புறங்களிலும், பயணிகளின் இருக்கைக்கு மேல், "ரேக்' பொருத்தப்பட்டுள்ளது.
*அவசர காலத்தில், பயணிகளை வெளியேற்ற வசதியாக, ஒவ்வொரு பெட்டியிலும், இரண்டு அவசர கால வெளியேற்ற சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளன.
* ரயில் எங்கு செல்கிறது என்பதை, பயணிகள் அறிந்து கொள்ள வசதியாக, ஆங்கிலம் மற்றும் தமிழில், மாறும் வழித்தட வரைபடங்கள் உள்ளன. இதில், எந்தப்பக்கம் ரயில்பெட்டி கதவு திறக்கும் என்பதும் காட்டப்படும்.
* ரயில் பெட்டியில், டிரைவரை உடன் தொடர்பு கொள்ள, அவசர அழைப்பு வசதி உள்ளது. "ஹெல்ப் லைன்' எண்ணும் எழுதப்பட்டுள்ளது.

Comments