
பரமக்குடி: "தமிழகத்தில் எந்த கட்சியையும் நம்பி, பா.ஜ., இல்லை' என,
பரமக்குடியில் நேற்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், மாநில தலைவர்
பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
பரமக்குடியில் நேற்று துவங்கிய இக்கட்சி
மாநில செயற்குழு கூட்டத்தில் அவர், தலைமை வகித்து பேசியதாவது: திருச்சியில்
நடந்த "இளந்தாமரை' மாநாட்டிற்கு பின், கட்சியில் உற்சாகம் எழுந்துள்ளது.
இம்மாநாடு வெற்றி, தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரிய எழுச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி
உள்ளது. பல அரசியல் கட்சிகளின் பார்வை, பா.ஜ., மேல் விழுந்துள்ளது.
துவக்கத்தில் 2 சதவீதமாக இருந்த ஓட்டு வங்கி, தற்போது 10 சதவீதமாக
உயர்ந்துள்ளது. அரசியல்வாதிகளின் பார்வையில், 15 சதவீதத்தை எட்டியுள்ளது.
டிச.,8ம் தேதிக்குள் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் பா.ஜ., வெற்றி பெறும், காங்., மூன்று
அல்லது நான்காவது இடம் அல்லது அதற்கும் கீழே தள்ளப்படும்.பரமக்குடி பா.ஜ.,
கோட்டை. பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன் மார்ச் 19ல்,
கொல்லப்பட்டார். இதை மூடி மறைக்கும் வகையில் வழக்கை, போலீஸ் திசை திருப்பி
உள்ளது. ஆனால், பயங்கரவாதிகள், தாங்களே கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
ஆகவே, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறிய அனைத்து தகவல்களும் பொய்யாகி உள்ளது
என, இல.கணேசன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் 24 மாவட்டங்களில், 604
மண்டலங்களில், பா.ஜ., முழு வளர்ச்சி அடைந்துள்ளது. கன்னியாகுமரி
மாவட்டத்தில், 68 ஆயிரத்து 900 உறுப்பினர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.
காஞ்சிபுரம் இரண்டாவது, திருவள்ளூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
ஒரு மாதத்திற்குள், ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட
உள்ளனர். நாளை (நவ.28) அரசியல் சூழல் குறித்தும், தேர்தல் யுக்திகள்
குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். தமிழகத்தில் எந்த கட்சியையும் நம்பி
பா.ஜ., இல்லை. பா.ஜ.,வை சார்ந்துதான் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை
உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், நமது சொந்த பலத்துடன் ஆட்சி அமையும்,
என்றார்.
இடையூறு இல்லை : பரமக்குடியில் காட்டுப்பரமக்குடி
முதல் ஆற்றுப்பாலம் வரை ரோட்டின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறு
இன்றி, பேனர்கள் மட்டுமே இருந்தன. பெரிய ஆர்ச்கள் மற்றும் ரோட்டை மறைத்து
ஆர்ச் எதுவும் வைக்கப்படவில்லை. செயற்குழு நடந்த மகாலில் இருந்த விளக்குகள் தவிர, வெளியில் கூடுதலாக ஒரு மின் விளக்கும் வைக்கப்படவில்லை. மகால் நுழைவு வாயிலில் அனைவருக்கும் கும்ப மரியாதை, சந்தனம், குங்குமம், விபூதி வழங்கி பெண் நிர்வாகிகள் வரவேற்றனர்.
அடுத்ததாக பாரதமாதா படத்திற்கு மரியாதை செலுத்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மகாலின் உள்ளே வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்சிங் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் போலீசாரைத் தவிர, முற்றிலும் ஊர்க்காவல் படையினரே பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். சர்தார்
வல்லபாய் படேலின் சிலைக்கு, கிராமங்களில் இருந்து இரும்பு, ஒரு பிடி மண்
சேகரித்து குஜராத் கொண்டு செல்ல ஏகமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
160 செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் 40 பேர் பங்கேற்றனர்.
Comments