தே.மு.தி.க.,
மாநில நிர்வாகிகள், பார்த்தசாரதி, சந்திரக்குமார், இளங்கோவன், மூவரும்,
விஜயகாந்த்தின் ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சிக்கு வந்தவர்கள். மற்ற
நிர்வாகிகளைவிட, இம்மூவருக்கும், கட்சி செயல்பாடுகளில் விஜயகாந்த்
முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். இதனால், அவர்கள் கட்சியில் செல்வாக்குடன்
வலம் வந்தனர். இந்நிலையில்,
மறுபுறம், மூவர் மீதும் மாவட்ட நிர்வாகிகளிடம்
இருந்து, விஜயகாந்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. "கட்சியின் அவைத்
தலைவர், பண்ருட்டி ராமச்சந்திரன், கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி
இருக்க, இவர்களே காரணம்' என்ற குற்றச்சாட்டும் உள்ளது. டில்லி சட்டசபை
தேர்தலில், 11 தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது. வேட்பாளர்களை
ஆதரித்து, பிரசாரம் செய்ய, விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா, கட்சி
எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட செயலர்கள் டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.
ஆனால், கட்சியின் முக்கியமான நிகழ்வுகளுக்கு செல்லும்போது, மூன்று மாநில
நிர்வாகிகளையும் கூடவே அழைத்துச் செல்லும் விஜயகாந்த், இம்முறை டில்லிக்கு
அழைத்துச் செல்லவில்லை.
இதுகுறித்து தே.மு.தி.க., நிர்வாகி
ஒருவர் கூறியதாவது: "ஏற்காடு இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிட
வேண்டும்' என, இவர்கள் கூறி வந்தனர். ஆனால், அதை ஏற்காமல், டில்லி சட்டசபை
தேர்தலுக்கு வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவித்தார். இதை, தங்களுக்கு
நெருக்கமான சிலரிடம், மூவரும் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால்
தான், இவர்களை டில்லிக்கு அழைக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் அனைவரும் தன்
கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என விஜயகாந்த் விரும்புகிறார்.
எனவே, கட்சியில் இவர்கள் செல்வாக்கை குறைக்க, இந்த நடவடிக்கையை விஜயகாந்த்
எடுத்திருக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
Comments