தொல்லை தரும் அழைப்புகளை தடை செய்ய வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கெடு

புதுடில்லி: ''தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, வங்கிகள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளன,'' என, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர், ராகுல் குல்லார் கூறியுள்ளார்.
மத்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய தலைவர், ராகுல் குல்லார் நேற்று கூறியதாவது: வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து, மொபைல் போன், தொலைபேசிகள் மூலமாக, பலருக்கும், தொல்லை தரும் அழைப்புகள் வருவதாக புகார் எழுந்துள்ளது.
வங்கிகள், தங்களின் கிரெடிட் கார்டு களை வாங்கும்படியும், வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்களை வாங்கும்படியும், மொபைல் போன் மற்றும் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் அனுமதி இல்லாமலேயே, அழைத்து பேசுவது அதிகரித்துள்ளது.


இதை தடுப்பதற்காக, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனுமதி இல்லாமல், வாடிக்கையாளர் களை தொந்தரவு செய்யும் வங்கிகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள தொலை தொடர்பு இணைப்பு களை துண்டிப்பது, சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சில தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு, கூடுதல் அவகாசம் கேட்டுள்ளன. இதனால், அவர்களுக்கு, அடுத்த மாதம், 15ம் தேதி வரை, அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ராகுல் குல்லார் கூறினார்.

Comments