சென்னை: தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில்,
பா.ம.க.,வும் இடம் பெறுகிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே நடந்த, ரகசிய
பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாக, பா.ஜ., வட்டாரம்
தெரிவித்தது. ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கட்சிகள், ஏற்கனவே இந்த அணியில் இடம்
பிடித்துள்ளன. தே.மு.தி.க.,வை கூட்டணியில் கொண்டு வருவதற்கான,
பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. விஜயகாந்தும் வருகிறபட்சத்தில்,
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு மாற்று அணியாக, தமிழகத்தில் தேசிய
ஜனநாயக கூட்டணி வலுப்பெறும்' என, பா.ஜ., வட்டாரம் நம்பிக்கை
தெரிவித்துள்ளது.
பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதும், அவரை வெற்றி பெற வைக்க, தமிழகத்தில் கூட்டணி பலத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம், தமிழக, பா.ஜ.,வுக்கு ஏற்பட்டது. அதையடுத்து, கூட்டணியில் எந்தெந்த கட்சிகளைச் சேர்த்தால், பலம் கிடைக்கும் என்ற ஆலோசனை துவங்கியது. அ.தி.மு.க., தி.மு.க., காங்., கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து, மற்ற கட்சிகளுக்கு தூது அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அந்த முயற்சிக்கு, துணையாக இருந்தவர், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். அவர், ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பா.ஜ., தலைமையில் அணி சேர்வது குறித்தும், அதன் சாதக அம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அதன் விளைவாக, பா.ஜ., அணியில் சேர, வைகோ சம்மதித்தார்; ஆனால், ராமதாஸ் சம்மதிக்கவில்லை. ஜாதி சங்கங்களின் ஆதரவுடன், தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறினார். ஆனால், "பிரதமர் பதவிக்கு மோடியைத் தான் ஆதரிப்போம்' என்று, ராமதாஸ் உறுதி அளித்திருந்தார். சொன்னபடியே, "சமுதாய ஜனநாயக கூட்டணி'யை ஏற்படுத்தி, 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை, பா.ம.க., அறிவித்தது. அவர்களும், தொகுதியில், திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வெறும் ஜாதி சங்கத்தை நம்பி, கரை சேர முடியாது என்பதை அறிந்துள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இப்போது தன் முடிவை மாற்ற முன்வந்துள்ளார். அதற்கு காரணம், அவரது மகன் அன்புமணியை சந்தித்து, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர் ராவ் பேசியது தான் என்கின்றனர். இருவருக்கும் இடையே நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில், கூட்டணி உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள போதிலும், அதில் மாற்றம் செய்யவும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், தொகுதிகளை முடிவு செய்யவும், பா.ம.க., சம்மதித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், பா.ஜ., தரப்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. "கூட்டணிக்கு, தே.மு.தி.க., தலைமை ஏற்க வேண்டும்' என, அவர் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.
அதை ஏற்க மறுத்த, பா.ஜ., தரப்பில் கூறப்பட்டதாவது: தேசிய அளவில், பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. அந்த கூட்டணியை, தமிழகத்திற்காக மாற்ற முடியாது. எல்லா மாநிலங்களிலும், "தே.ஜ.கூ.,' என்ற பெயரில் தான் கூட்டணி உள்ளது. மேலும், இந்த தேர்தல், காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே நடக்கும் தேர்தல். யார் பிரதமர் என்பதில், மோடிக்கும், ராகுலுக்கும் இடையே தான் போட்டி. அப்படி இருக்கும்போது, தே.மு.தி.க., தலைமையில் கூட்டணி என்பது சரியாக இருக்காது. 2016 சட்டசபை தேர்தலில் வேண்டுமானால், தமிழகத்தில் கூட்டணிக்கு, தே.மு.தி.க., தலைமை தாங்கலாம். இவ்வாறு, பா.ஜ., தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜயகாந்த் பரிசீலித்து வருவதாகவும், விரைவில், அவரும் இந்த கூட்டணியில் சேருவார் எனவும், பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், பேச்சுவார்த்தையை முடித்து, டிசம்பர் மத்தியில், கூட்டணி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவும், பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
Comments