புத்தாண்டிற்குள் தெலுங்கானா உதயமாவது சந்தேகம்: கடும் எதிர்ப்பால் மத்திய அரசு இழுத்தடிப்பு

தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான ஆலோசனைகள் முடிந்து விட்டாலும், கடைசி நேர முட்டுக்கட்டைகள் பலமாக எழுந்துள்ளதால், புத்தாண்டில் தெலுங்கானா உதயமாவது சந்தேகமே என, டில்லி வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
உயர்மட்டக்குழு அமைப்பு:

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்காக, மத்திய அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ஆந்திர அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரிடமும், ஆலோசனைகள் மேற்கொண்டது.
இதையடுத்த, தெலுங்கானா மாநில வரைவு மசோதா தயாரிக்கும் பணியில், கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் உயர்மட்டக்குழு ஈடுபட்டு வந்தது. கடந்த புதன்கிழமை நடந்த, மூன்று மணி நேர இறுதி ஆலோசனை, நேற்றும் தொடர்ந்தது. தெலுங்கானா வரைவு மசோதாவை, உயர்மட்டக்குழு, ஏறத்தாழ தயாரித்து முடித்து விட்டாலும், இறுதி அறிக்கை, எப்போது மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், கூட்டம் முடிந்து வெளியில் வந்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, 'இன்னும், ஆலோசனை முடியவில்லை; சில விஷயங்களை, இறுதி செய்ய வேண்டியுள்ளது' என்றார். இதை வைத்துப் பார்க்கும் போது, புத்தாண்டில் தனிமாநிலம் உதயமாவதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன், ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு கேட்டு, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை, சந்தித்த வண்ணம் உள்ளார்.


ஜெகன் சென்னை வருகை:

சரத் யாதவ், சரத் பவார், மம்தா பானர்ஜி, பிரகாஷ் கராத், நவீன் பட்நாயக் என முக்கிய தலைவர்களை சந்தித்து, ஆதரவு கேட்டுள்ள ஜெகன் மோகன், விரைவில் ஜெயலலிதாவை சந்திக்க சென்னை வரவுள்ளார். இது ஒருபுறம் இருக்க, 'ஐதராபாத் நகரம் யாருக்கு சொந்தம்' என்ற சிக்கலுக்கும், இதுவரை தீர்வு காணப்படவில்லை. தெலுங்கானா தவிர்த்து, பிற பகுதிகளை உள்ளடக்கிய, சீமாந்திரா மாநிலத்திற்கு, அப்பகுதியில் உள்ள கர்நூலை தலைநகரம் ஆக்கலாம் என்றாலும், அதற்குரிய நிதி, பெரிய அளவில் ஒதுக்க வேண்டும். தெலுங்கானா மற்றும் தெலுங்கானா தவிர்த்து பிற பகுதியான, சீமாந்திரா ஆகிய இரண்டுக்குமே, சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டுமெனில், அதை, அரசியல் சட்டத்திருத்தம் மூலமாகவே செய்ய முடியும்.
குளிர்கால கூட்டத்தொடர்:


இந்த சிக்கல்களுக்கு, தீர்வு காண, காலஅவகாசம் தேவைப்படும். எனவே, தெலுங்கானா மசோதா, டிசம்பர், 5ல் துவங்கும், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், தாக்கல் ஆவதற்கு வாய்ப்பு இல்லை. மாறாக, சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடரின் போதோ தாக்கல் செய்யப்படலாம். எனவே, புத்தாண்டு பிறப்பதற்குள், தெலுங்கானா உதயமாவது சந்தேகமே என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments