தமிழக அரசு வழங்கும் விலையில்லா மின் சாதனங்களில் தரமற்ற உதிரி பாகங்கள்?

கோவை: "தமிழக அரசின் சார்பில், மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாதனங்களில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், தரமற்ற உதிரிபாகங்கள் பொருத்தப்படுகின்றன; இதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, கோவை மாவட்ட பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தமிழக அரசின் சார்பில், அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்சி வழங்கப்படுகின்றன. இச்சாதனங்களை சப்ளை செய்வதற்கான டெண்டர், பல்வேறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பட்டர்பிளை, மந்த்ரா, விஜயலட்சுமி, தேவ் இன்டஸ்ட்ரீஸ், சாஸ்தா, லட்சுமி, டி.ஆர்.எஸ்., அமிர்தா, பொன்மணி, டீட்டா, பாலாஜி நிறுவனங்கள், 37.9 லட்சம் மிக்சி, வெட்கிரைண்டர், மின் விசிறிகளை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன; இதன் மொத்த மதிப்பு 647.5 கோடி. தமிழகத்தில் நிலவும் கடும் மின்தடையால், விலையில்லா மின்சாதனங்கள் தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், சில நிறுவனங்கள் மின்சாதன உதிரி பாகங்களை, குறிப்பாக மோட்டார்களை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்து, விலையில்லா மின் சாதனங்களில் பொருத்தி, சப்ளை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், "தொழில் நகரமான கோவையில் மின்வெட்டு அதிகரித்துள்ள நிலையிலும், நாங்கள் உள்நாட்டில் தயாராகும் மோட்டார்களையே பயன்படுத்துகிறோம். இவற்றின் காயில்களில் தாமிரக்கம்பிகள், தரமான "கெபாசிட்டர்' இருக்கும். அரசு திட்டம் என்பதால், தரமான சாதனங்களையே தயாரிக்கிறோம். பிற மாவட்டங்களில் தயாராகும் மின்சாதனங்களின் தரத்தை, அரசு ஆய்வு செய்ய வேண்டும். சீன தயாரிப்பு மோட்டார்கள் அதிகநாள் உழைக்காது. அவற்றில், தாமிர கம்பிகளுக்கு பதிலாக, அலுமினிய வயர் மீது காப்பர் பூச்சு இருக்கும்,' என்றனர்.

கோவை மாவட்ட பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மணிராஜ் கூறியதாவது: கோவை தவிர, பிற மாவட்டங்களில் தயாராகும், அரசின் விலையில்லா பொருட்களில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்கள் பொருத்தப்படுகின்றன. குறிப்பாக, சீன மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய கிரைண்டர் மோட்டார் விலை 600 ரூபாய். சீன மோட்டார் 550 ரூபாய். ஐம்பது ரூபாய் லாபத்துக்காக இப்படி செய்கின்றனர். இதனால், மக்களுக்கு தரமில்லா மின்சாதனங்கள் வழங்கப்படுகின்றன. உள்நாட்டில் உதிரிபாக தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருப்போரும், கம்பெனிகளில் பணியாற்றுவோரும் வேலை இழக்கின்றனர். சென்னையில், கப்பல்களில் இருந்து இதுவரை 17 லட்சம் சீன மோட்டார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், இறக்குமதிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்பு மின் சாதனங்களில், சீன நாட்டு தயாரிப்பிலான உதிரிபாகங்களை பொருத்த வேண்டிய அவசியம் என்ன, என்பது குறித்து அரசுதான் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மின் சாதனங்களுக்கான, உதிரிபாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை அரசு தடை செய்ய வேண்டும். இவ்வாறு, மணிராஜ் தெரிவித்தார்.

Comments