அதிரும் டில்லி சட்டசபை தேர்தல் களம்: ஓட்டு வேட்டையில் தமிழக தலைவர்கள்

டில்லியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டு வேட்டையாட துவங்கியுள்ளதால், தேர்தல் களம், களைகட்டத் துவங்கியுள்ளது.
டிசம்பர், 4ல், டில்லி மாநில சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், முக்கிய கட்சிகளான, காங்கிரஸ், பா.ஜ., மற்றும் 'ஆம் ஆத்மி' ஆகியவை முக்கிய கட்சிகள். இந்த கட்சிகளுக்காக, காங்கிரஸ் தலைவர், சோனியா, துணைத் தலைவர், ராகுல், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி
போன்றோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டில்லியில், பத்து லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசித்தாலும், இவர்கள் அனைவருமே, ஒரு குறிப்பிட்ட பகுதியில், மொத்தமாக வசிக்கவில்லை. ஆங்காங்கே, சில நூறு குடும்பங்களாகவே வசிக்கின்றனர். இருப்பினும், சில நூறு ஓட்டுகள் தான், டில்லி தேர்தலில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்பதால், தமிழர்களின் ஓட்டுகளுக்கு, முக்கிய கட்சிகள் அனைத்தும் குறிவைத்துள்ளன.


டில்லியில் முகாம்:

தமிழக, பா.ஜ., மூத்த தலைவர், இல.கணேசன், கடந்த சில நாட்களாகவே, டில்லியில் முகாமிட்டு, தமிழர்கள் வசிக்கும் பகுதியை வலம் வருகிறார். வீடு வீடாக சென்று, பா.ஜ., வேட்பாளர்களுக்காக, ஓட்டு சேகரித்தார். ஏற்காடு இடைத் தேர்தலைக் கூட புறக்கணித்துள்ள, தே.மு.தி.க., டில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த கட்சியும் டில்லியில், பிரசாரத்தை துவக்கியுள்ளது. தே.மு.தி.க., வேட்பாளர்கள், ஏற்கனவே ஓட்டு சேகரித்த வண்ணம் இருந்தாலும், இவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக, கட்சி தலைவர் விஜயகாந்த், நேற்று டில்லி வந்தார். இவருடன், மனைவி பிரேம லதா மற்றும் கட்சியின் இளைஞர் அணி தலைவர், சுதிஷ் ஆகியோரும் வந்தனர். ஐந்து நட்சத்திர சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள இவர்கள், சில மணிநேர ஓய்வுக்கு பிறகு, மாலையில், பிரசாரத்திற்கு கிளம்பினர். விஜயகாந்த், பிரேமலதா இணைந்து செல்லாமல், வெவ்வேறு இடங்களுக்கு சென்று, பிரசாரம் மேற்கொண்டனர். பெரும்பாலும், தமிழர்கள் வசிக்கும் வீடுகளை ஒட்டிய பகுதிகளில், இவர்கள் ஓட்டு சேகரித்தனர். வரும் சனிக்கிழமை வரை, டில்லியிலேயே தங்கியிருந்து, இருவரும், தே.மு.தி.க., போட்டியிடும் தொதிகளிலும் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.


குளிர்காலம்:

இதே போல், காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக, தமிழர்களின் ஓட்டுகளை கேட்டு, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், வாசன், டில்லி தேர்தல் களத்தில், குதித்துள்ளார். தமிழர்கள் வசிக்கும் தொகுதிகளை, இவர் தேர்வு செய்துள்ளார். டில்லியில் தற்போது குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால், இந்த தமிழக தலைவர்கள், மாலை, 5:00 மணிக்கு மேல் பிரசாரத்தை துவக்கி, இரவு, 8:30 மணி வரை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில், தேர்தல் பிரசாரம், காலையில் துவங்கி இரவு வரை நடைபெறும். ஆனால், டில்லியில், நம் தலைவர்கள், மாலையில், ஒன்றிரண்டு மணி நேரம் பிரசாரம் செய்து, கடும் குளிரில் இருந்து தப்பி விடுகின்றனர்.

Comments