மத்திய
மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த, 'லெஹர்' புயல், அந்தமான் தலைநகர்
போர்ட் பிளேயரை கடந்து, அதிதீவிர புயலாக மாறியுள்ளது. நேற்று காலை
நிலவரப்படி, இந்தப் புயல், மேற்கு, வட மேற்காக நகர்ந்து,
மசூலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே, 650 கி.மீ., தொலைவில் நிலை
கொண்டுள்ளது. 'இந்தப் புயல் மேலும், மேற்கு - வட மேற்காக நகர்ந்து, இன்று
பிற்பகல், 12:00 மணியளவில், ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே கரையை
கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அந்தமான்
மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று பலத்த மழை
பெய்தது. லெஹர் புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு, 170 முதல், 200
கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
'கடல் அலை, 2 முதல், 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும்' என, வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளதால், பீதி அதிகரித்துள்ளது. ஆந்திராவில் மையம்
கொண்டுள்ள புயலால், தமிழகத்தில் சில இடங்களில், கடந்த, 24 மணி நேரத்தில்,
பலத்த மழை பெய்துள்ளது. மேட்டுப்பாளையத்தில், 2 செ.மீ., மழையும், நெல்லை
மாவட்டம், சிவகிரி மற்றும் ஆய்க்குடியில், 1 செ.மீ., மழையும்
பதிவாகியுள்ளது. இன்றும் மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 'தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில், மழை அல்லது
இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன்
காணப்படும்; ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், 12ம் தேதி, 'பைலின்' புயல்
தாக்கத்திற்கு ஆளான, ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில், இன்னும் பாதிப்பு
சரி செய்யப்படாத நிலையில், இரு மாநிலங்களும் கேட்டுள்ள, நிவாரண நிதியில்
கால் பங்கு கூட, மத்திய அரசு வழங்காத நிலையில், அடுத்த புயல், ஆந்திராவை
தாக்க உள்ளதால், ஆடிப்போயுள்ளது, கிரண்குமார் ரெட்டி தலைமையிலான, ஆளும்
காங்கிரஸ் அரசு. லெஹர் புயல் இன்று கரையை கடக்க உள்ளதால், ஆந்திரா மற்றும்
ஒடிசா மாநிலங்களில் நிலைமையை சமாளிக்க, தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
தயார் நிலையில் உள்ளனர்.
அதிகாரி ஆய்வு:
மத்திய உள்துறை செயலர், அனில் கோஸ்வாமி, ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்டுள்ள, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில, தலைமைச் செயலர்களை அவர் தொடர்பு கொண்டு, முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தார். ''இரு மாநிலங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். நிலைமையை மத்திய அரசும் தீவிரமாக கண்காணித்து வருகிறது,'' என அவர், பின், நிருபர்களிடம் கூறினார்.
Comments