வெங்காய விலையை தொடர்கிறது தக்காளி: டில்லியில் மக்கள் திண்டாட்டம்

புதுடில்லி:கடந்த மாதம், டில்லியில், 1 கிலோ வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தக்காளியும் அந்த விலையை எட்டியுள்ளது. சில்லரை கடைகளில், 1 கிலோ தக்காளி, 80 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வெங்காயத்தால் கண்ணீர்:வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய உணவு வகைகளைத் தயாரிப்பது இல்லை. குறிப்பாக, வெங்காயம் விலை, அடிக்கடி உயர்ந்து,
சமையல் செய்யும் இல்லத்தரசிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும், கண்ணீர் விட வைத்து விடுகிறது.தலைநகர் டில்லியில், கடந்த மாதம் முழுவதும், 1 கிலோ வெங்காயம், ??? ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில்லரை கடைகளில், இந்த அளவு விலை இருந்த நிலையில், மொத்த விலை கடைகளில், 70 - 90 ரூபாய் வரை, வெங்காயம் விற்கப்பட்டது.இதனால், சட்டசபை தேர்தலை சந்திக்கும் டில்லி மாநிலத்தில், பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி, ஏற்றுமதி வெங்காயத்திற்கு கூடுதல் விலை நிர்ணயம் போன்ற நடவடிக்கைகளால், வெங்காயத்தின் விலை சற்று குறைந்து உள்ளது.டில்லியில், 1 கிலோ வெங்காயம், 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில், தக்காளி விலை, கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த இரு வாரங்களாக, விலை படிப்படியாக உயர்ந்து, இப்போது, 1 கிலோ வெங்காயம், சில்லரை விலையில், 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஆசாத்பூரில் உள்ள மொத்த விலை கடைகளில், 1 கிலோ தக்காளி, 60 - 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி விலை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என கருதிய, காங்கிரஸ், முதல்வர், ஷீலா தீட்ஷித் தலைமையிலான அரசு, 'மதர் டயரி' எனப்படும், கூட்டுறவு பண்டகசாலை அமைப்பு மூலம், தலைநகரில், 400 சில்லரை கடைகளைத் திறந்து, 1 கிலோ தக்காளி, 64 ரூபாய் என்ற விலைக்கு விற்று வருகிறது.கடந்த வாரத்தில், 1 கிலோ, 40 ரூபாயாக இருந்த தக்காளி, இப்போது, 80 ரூபாய் ஆகியுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.


வரத்து குறைவு:

இந்த வாரத்தில் திடீரென விலை உயரக் காரணம் குறித்து, மொத்த வியாபாரிகள் கூறியதாவது:டில்லிக்கு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேச மாநிலங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட லாரிகளில், தக்காளி வந்து கொண்டிருந்தது. கடும் பனிபொழிவு நிலவுவதால், இமாச்சல பிரதேசத்திலிருந்து லாரிகள் வரவில்லை.இதனால் விலை உயர்ந்துள்ளது. 15 - 20 லாரிகளில் தான், வெங்காயம் வருகிறது. அதனால் தான் விலையேற்றம் காணப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, நேற்று முன்தினம் நிலவரப்படி, அந்தமான், நிகோபார் தீவுகளின் போர்ட்பிளேரில், 1 கிலோ தக்காளி, 80 ரூபாய்க்கும், மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வாலில், 70 ரூபாயாகவும், 57 நகரங்களில், சராசரியாக, 40 ரூபாய்க்கும், ஜம்முவில், 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தக்காளி விலை ஏற்றத்திற்கு, தக்காளி சாஸ், தக்காளிச் சாறு, தக்காளி கெட்சப் தயாரிப்பில் நிறுவனங்கள் மும்முரமாக இருப்பதும் காரணம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments